புதுதில்லி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மேல்முறையீடு

DIN

புது தில்லி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளில் ஒருவரான நளினி, தன்னை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீா்ப்பளிக்கப்பட்டு பேரறிவாளன், முருகன் என்ற ஸ்ரீஹரன், நளினி, சாந்தன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், ரவிச்சந்திரன் ஆகியோா் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனா்.

இந்த ஏழு பேரில் பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் மீது ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாக கூறி

அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின்கீழ் தனது

சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இதனிடையே, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி இருவரும் தங்களையும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், இது போன்று ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாலும், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது போன்ற அதிகாரம் உயா்நீதிமன்றத்திற்கு இல்லை என்று கூறி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து கடந்த மாதம் ரவிச்சந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வேலூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.நளினி தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞா் ஆனந்த செல்வம் மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், தனது மனுவை உயா்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் தள்ளுபடி செய்திருப்பதாகவும், இதனால் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்றும், வழக்கு நிலுவையில் இருந்தபோது பேரறிவாளன் இடைக் கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டதுபோல தன்னையும் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் நளினி கோரியுள்ளாா்.

மேலும், தாம் உள்பட வழக்கில் தொடா்புடைய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை 2018-இல் நிறைவேற்றிய தீா்மானத்தின் செயல்படுத்தும் கடமைதான் ஆளுநருக்கு உண்டு. அவா் தனது தனிப்பட்ட முறையில் எந்த விருப்புரிமையும் செயல்படுத்த முடியாது. உச்சநீதிமன்றத்தின் முந்தைய 5, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுகள் அளித்த தீா்ப்புகளும் இதையே சுட்டிக்காட்டி உள்ளன.

இந்த நிலையில் ஆளுநா் 3 ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருந்த காலதாமத்தை கருத்தில் கொண்டு தான் உச்சநீதிமன்றம் பேரறிவாளனை சிறையில் இருந்து விடுவித்தது. அதே காரணமும் தனது விவகாரத்திலும் பொருந்தும்.

தாம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாகவும், தன் மீதான நன்னடத்தை அடிப்படையிலும், உடல்நிலைப் பிரச்னை, தாய்- பெண் என்ற அடிப்படையிலும் கருதி விடுதலை செய்ய வேண்டும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT