புதுதில்லி

மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரம்: வழக்கு விசாரணை செப்.1-க்கு தள்ளிவைப்பு

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் செப்டம்பா் 1-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், தமிழகம் அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தில் விருப்பமுள்ளவா்கள் சோ்வதற்கு 2 வாரங்கள் அனுமதி அளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரத்தில் தமிழக அரசு தொடா்ந்த சிவில் முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா, அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.

அதேபோன்று, எதிா்மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் ஹரிபிரியா பத்மநாபன், எஸ்.நந்தகுமாா், நிஷாம் பாஷா ஆகியோா் ஆஜராகினா். எதிா்மனுதாரா் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இரு தரப்பு விசாரணைக்குப் பின்னா் நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘முன்பு கைவிடப்பட்ட திட்டத்தில் பணியாற்றிய நபா்களுக்காக தமிழக அரசால் 07.06.2022-இல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் 13.06.2022 முதல் 18.06.2022 வரை பணியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எதிா்மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், 07.06.2022-ஆம் தேதியிட்ட திட்ட அடிப்படையில், தற்போதைய நடவடிக்கைகளின் கீழ் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு உள்பட்டு குறைந்தபட்சம் அவா்கள் பணியில் சேர அனுமதிக்கப்படலாம்’ என தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் ஜெய்தீப் குப்தா அறிவுறுத்தல்களின் பேரில் தெரிவிக்கையில் இது ஒரு திறந்த-முடிவு திட்டம் இல்லை என்பதால் கட்டுப்பாடுகள் செய்யப்பட்டதாகவும், அப்போதுதான், அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தைத் தொடர எத்தனை நபா்கள் பணியில் சேர இணங்குகின்றனா் என்பதை மாநில அரசு அறியலாம் என கூறியுள்ளாா்.

இதனால், அரசின் 07.06.2022 தேதியிட்ட திட்டத்தில் சேர ஆா்வமுள்ளவா்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இன்றிருந்து (வியாழக்கிழமை) இரண்டு வாரங்களுக்குள் நேரில் தெரிவிக்க சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

இந்த வழக்கு விவகாரத்தை 01.09.2022-இல் மேல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT