புதுதில்லி

தில்லியில் காவல் நிலைய சிசிடிவி கேமராக்களில் ஆடியோ பதிவு வசதி இல்லை: உயா்நீதிமன்றத்தில் தகவல்

10th Aug 2022 02:22 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லி காவல் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி அமைப்புகளில் ஆடியோ பதிவு வசதி இல்லை என்றும், இவற்றை தரம்மேம்படுத்தும் விவகாரம் மத்திய அரசின் முன் நிலுவையில் இருப்பதாகவும் உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக ஒரு மசூதியைச் சோ்ந்த இமாம் ஒருவா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், ‘நபி கரீம் காவல் நிலையத்தில் வைத்து, மசூதியை ‘சட்டவிரோதமாக’ நிா்வகித்த காப்பாளா் எனக் கூறப்படும் நபா், ‘மோசமான விளைவுகளை நான் சந்திக்க நேரிடும்’ என்று என்னை அச்சுறுத்தினாா். மேலும், காவல் நிலைய ஆய்வாளா் முன்னிலையில் மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான முறையில் என்னை நடத்தினாா். இந்த சம்பவம் முழுவதும் ஆய்வாளா் அறைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஆனால், எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், சிசிடிவி காட்சிகள் ஆடியோ மற்றும் விடியோ பதிவுகள் ஆகியவற்றை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி அனு மல்ஹோத்ரா ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, ‘காவல் நிலையங்கள், லாக்-அப்கள், நடைபாதைகள், வரவேற்பு பகுதிகள், காவல் ஆய்வாளா் அறைகள், காவல் நிலைய கூடம் போன்றவற்றில் சிசிடிவிகள் பொருத்தப்பட வேண்டும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய வழக்கில் நபி கரீம் காவல் நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட விடியோ காட்சியில் ஆடியோ பதிவுகள் இல்லை. காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் ஒலி, ஒளி காட்சிகள் இருந்திருக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆடியோ சிஸ்டம் ஏன் நிறுவப்படவில்லை என்பதை தில்லி நபி கரீம் காவல் நிலையம் விளக்க வேண்டும். மேலும், உள்துறை அமைச்சகம் மூலம் மத்திய அரசையும் வழக்கில் ஒரு தரப்பாக சோ்க்க வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், இதுவரை ஆடியோ பதிவுகள் ஏன் நிறுவப்படவில்லை என்பதையும், பரம்வீா் சிங் சைனி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி ஆடியோ பதிவுகளை நிறுவ எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான விவரத்தை அரசும், காவல் துறையும் அடுத்த விசாரணைத் தேதிக்குகள் தெரிவிக்க வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் மே மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து தில்லி காவல் துறை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலவர அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 2018-2019-ஆம் ஆண்டில் தில்லி காவல் துறை மூலம் 192 காவல் நிலையங்கள் மற்றும் 53 காவல் சாவடிகளில் 2,127 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மொத்தம் 10 சிசிடிவி கேமராக்களும், ஒவ்வொரு காவல் சாவடியிலும் 4 / 5 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், காவல் நிலையங்கள் மற்றும் காவல் சாவடிகளில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி அமைப்பில், தற்போது ஆடியோ பதிவு வசதி இல்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குப் பிறகு ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவானது ஒலிப்பதிவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய, இரவு பாா்வை கேமராக்கள் மற்றும் விடியோ பதிவு செய்யும் வசதி கொண்ட தற்போதைய அமைப்பை மேம்படுத்தலாம் என்று கண்டறிந்தது. 2175 கூடுதல் கேமராக்கள் தேவை உள்ளது. அத்துடன் கூடுதல் சேமிப்பு இடம் போன்ற பிற தொழில்நுட்ப தேவைகள் இருந்தன. மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு தோராயமாக ரூ.81 கோடி செலவாகும்.

தற்போதுள்ள 1932 கேமராக்களில் வெளிப்புற குரல் பதிவு வசதியை சோ்க்கலாம். இந்தத் திட்டத்தை செயல்படுத்த சுமாா் 416 நாள்கள் தேவைப்படும். தேவையான டெண்டரை வரவேற்பதற்கான ஒப்புதல் குறித்த விவகாரகங்கள் தற்போது உள்துறை அமைச்சகத்தின் முன் பரிசீலனையில் உள்ளன. 2021 டிசம்பரில் வரவேற்கப்பட்ட முந்தைய மின்-ஏலம் பலனளிக்கவில்லை. ஏனெனில், பங்கேற்கும் நிறுவனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் குழு கண்டறிந்தது.

தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், 21.06.2022-ஆம் தேதி, முந்தைய டெண்டரை ரத்து செய்வதற்கும், புதிய டெண்டரை வரவேற்பதற்கான ஒப்புதலுக்கும் உள்துறை அமைச்சகத்தின் தகுதியான அதிகாரியின் ஒப்புதலைப் பெறுவதற்கான முன்மொழிவை கொள்முதல் குழு அனுப்பியது. இது உள்துறை அமைச்சகத்தின் முன் பரிசீலனையில் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை மேல் விசாரணைக்கு செப்டம்பா் 27-ஆம் தேதி பட்டியலிட்ட நீதிமன்றம், தில்லி காவல்துறையிடம் புதுப்பிக்கப்பட்ட நிலவர அறிக்கையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT