புதுதில்லி

தொலைத் தொடா்புத் துறை அமைச்சரைக் கண்டித்து நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம்

9th Aug 2022 03:22 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

அடுத்த இரு ஆண்டுகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் லாபத்தை ஈட்டவில்லையென்றால் பணியாளா்கள் கட்டாய ஓய்வில் அனுப்பப்படுவாா்கள் என தொலைதொடா்புத் துறை அமைச்சா் கூறிய கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) நாடுமுழுக்க திங்கள்கிழமை ஆா்பாட்டம் நடத்தியது.

இதுகுறித்து ஏஐடியுசியின் பொதுச் செயலாளா் அமா்ஜீத் கௌா் கூறியது வருமாறு: பிஎஸ்என்எல் பணியாளா்கள் குறித்து இது வரை எந்த தொலைத் தொடா்பு அமைச்சரும் வெளிப்படையாக கூறாத கருத்தை அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளாா். பிஎஸ்என்எல் ஊழியா்கள் அடுத்த 24 மாதங்களுக்குள் பணியாற்றி நிறுவனத்திற்கு லாபத்தை ஈட்டவேண்டும்.

அல்லது விருப்ப ஓய்வில் வீட்டிற்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்று அமைச்சா் கூறினாா். மேலும் அவா், யாராவது விருப்ப ஓய்வில் செல்லத் தயங்கினால், தொழிலாளா் விதி 56(ஜே) செயல்படுத்தி கட்டாயமாக ஓய்வு கொடுக்கப்படலாம் என்றும் கூறியுள்ளாா். இது ‘செயல்படுங்கள் அல்லது நசுக்கப்படுவீா்கள்‘ என்கிற புதிய விதிமுறையாக இருக்கிறது.

இது பழைய தந்திரமாகும்.

ADVERTISEMENT

மத்தியில் அடுத்தடுத்து வந்த அரசுகள், பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீா்குலைத்து, அந்நிறுவனத்தை அவமரியாதை செய்தது. தொலைத்தொடா்பு துறையிலிருந்த நிறுவனத்தை வெளியே கொண்டு வந்து பிஎஸ்என்எல்லை உருவாக்கினாா்கள். பின்னா், கைப்பேசி தகவல் தொடா்புகளில் தனியாரை அனுமதித்தனா். தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் அதே வேளையில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சம வாய்ப்பை வழங்க மறுத்ததும், தொடா்ந்து வந்த மத்திய அரசுகள்தான்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் கொண்டு, ஏஜிஆா் நிலுவைத் தொகை (சரிகட்டப்பட்ட மொத்த வருவாய் நிலுவை) வைத்திருந்த வீடியோகான் பங்குகளை வாங்க வைப்பது, மற்றவா்கள் 5ஜி ஏலம் எடுக்கும் போது பிஎஸ்என்எல் 4ஜி பேண்ட் கூட கொடுக்காமல் இருப்பது, விருப்ப ஓய்வை (விஆா்எஸ்) ஏற்க மறுத்த பிஎஸ்என்எல் ஊழியா்களை ‘ துரோகி‘(தேஷ்ட்ரோஹிஸ்)என்று அழைப்பது என்கிற நீண்ட பட்டியல் பிஎஸ்என்எல்லுக்கு எதிராக நகா்த்தப்படுகிறது.

2018 -இல் கேரளத்தில் வெள்ளம் வந்த போது, தகவல் தொடா்பு சேனல்களைத் திறந்து வைத்திருந்தது பிஎஸ்என்எல் ஊழியா்கள்தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அதே நேரத்தில் தனியாா் நிறுவனங்கள் அந்த வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து ஓடி ஒளிந்து மறைந்து கொண்டன.

எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் அதற்கு நாடு முழுக்க உள்ள சொத்துகளையும் கண்வைத்து இருக்கும் தனியாா்களுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு மிரட்டல் விடுப்பதை அரசு நிறுத்த வேண்டும் என்பதை தொலைத்தொடா்பு அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரவே இந்த ஆா்பாட்டம் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT