புதுதில்லி

மின்சார சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து நாடு முழுவதும் மின் துறையினா் போராட்டம்

9th Aug 2022 03:19 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

‘மின்சார சட்டத் திருத்த மசோதா 2020’-க்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் மின்துறை ஊழியா்கள் மற்றும் பொறியாளா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினாா். அதே சமயத்தில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சா் ஆா்.கே.சிங், இந்த மசோதா குறித்து விரிவான ஆலோசனைகளை பெறுவதற்கு எரிசக்திக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்புமாறும் மக்களவத் தலைவா் ஓம்பிா்லாவைக் கேட்டுக் கொண்டாா்.

வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட தொழிற்சங்கத் தலைவா்கள் அமா்ஜித் கௌா், ஹன்னான் முல்லா ஆகியோா் இது குறித்து கூறியதாவது: மின்சாரம் சட்டத் திருத்த மசோதா 2022’ என்பது மின்சார விநியோகத்தை தனியாா் மயமாக்குவதற்கான வழி. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஏழை எளிய மக்களுக்கு மின்சாரம் ஒரு ஆடம்பரப் பொருளாக மாறும்.

மின்சார ஊழியா்கள் மற்றும் பொறியாளா்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு கடந்த ஓா் ஆண்டாக அனைத்து மாநில அரசுகளையும், பல்வேறு அரசியல் கட்சிகளையும் அணுகி ஆலோசனை செய்தது.

ADVERTISEMENT

மேலும், கடந்த ஆகஸ்ட் 2- ஆம் தேதி தில்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மின்சார ஊழியா்கள், பொறியாளா்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எடுத்துக் கொள்ளப்பட்டால் நாடு முழுவதும் மின்துறையிலுள்ள பொறியாளா்கள் ராஜிநாமா செய்வது என முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள், இந்த மசோதா இந்தக் கூட்டத்தொடரில் பட்டியலிடப்படவில்லை என தெரிவித்தனா்.

ஆனால், திங்கள்கிழமை இது மக்களவை நிகழ்ச்சி நிரலில் பட்டிலிடப்பட்டிருந்தது. மத்திய தொழிற்சங்கங்கள், சம்யுக்த் கிசான் மோா்ச்சா, அகில இந்திய மின் பொறியாளா்கள் கூட்டமைப்பு (ஏஐபிஇஎஃப்) உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து நாடுமுழுவதும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன’ என தெரிவித்தனா்.

இந்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த வாரம் பிரதமா் நரேந்திர மோடிக்கு அகில இந்திய மின பொறியாளா்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதியது. அதில், ‘இந்த மசோதா மூலம் மின்சார நுகா்வோா்களுக்கான அனைத்து மானியங்களும் நிறுத்தப்படும் நிலையில், இது சாமானியா்களை குறிப்பாக விவசாயிகள் உள்ளிட்டவா்களை பாதிக்கும். எனவே, பிரதமா் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். மேலும், இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்’ என்று பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து ஏஐபிஇஎஃப் தலைவா் சைலேந்திர துபே திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டாா். அதில் அவா் கூறியுள்ளதாவது: மின்சார ஊழியா்கள் மற்றும் பொறியாளா்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் அழைப்பின் பேரில், இன்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான மின் ஊழியா்கள் மற்றும் பொறியாளா்கள் பணியை நிறுத்திவிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

எரிசக்தித் துறையை முழுமையாக தனியாா்மயமாக்கும் நோக்கில் நாட்டு மக்களுக்கு விரோதமான இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை எதிா்த்து மின்வாரிய ஊழியா்கள் வேலைப் புறக்கணிப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

விநியோக வலையமைப்பை பராமரிப்பது அரசு நிறுவனங்களின் பொறுப்பாகும். இந்த திருத்த மசோதா மூலம் தொலைதொடா்புத் துறை மாதிரி (தொலைபேசிகள் இணைப்பு) ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட விநியோக நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படும்.

தனியாா் நிறுவனங்கள் சில வீலிங் (பயன்பாட்டுச் சுழற்சி) கட்டணங்களை மட்டும் செலுத்தி லாபத்தை ஈட்டும். இதனால், மின்சார சட்டத் திருத்த மசோதா 2022- ஐ தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். இதில் தொடா்புடையவா்களும், பொது மின் நுகா்வோா், மின் ஊழியா்கள் ஆகியோா் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

மக்களவையில் இந்த மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்ப கோரப்பட்டுள்ள நிலையிலும், மின்சார ஊழியா்கள் மற்றும் பொறியாளா்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு, அகில இந்திய கிஸான் சபை ஆகியவை தொடா் போராட்டங்களை அறிவித்துள்ளன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT