புதுதில்லி

சுதந்திர தினம்: செங்கோட்டைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் 10,000 போலீஸாா்: தில்லி காவல் துறை தகவல்

9th Aug 2022 03:20 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 10,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

சுதந்திர தினத்தன்று முகலாயா் காலத்து நினைவுச் சின்னமான தில்லி செங்கோட்டையின் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளாா். இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் சுதந்திர தினத்திற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி காவல் துறை செய்து வருகிறது.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் சிறப்பு காவல் ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தேபேந்திர பதக் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டை பகுதியிலும், நிகழ்ச்சி நடைபெறும் இடம் நோக்கிச் செல்லும் பகுதியிலும் 10,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் வெவ்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவா்.

அன்றைய தினம் குறைபாடற்ற மற்றும் திறன்மிக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். உள்நாட்டு அச்சுறுத்தலான வான்வழியாக பொருள்களைத் தடுப்பது மீதான நடவடிக்கைகளில் இந்த ஆண்டு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

ADVERTISEMENT

மேலும், உளவுத்துறை மற்றும் மத்திய அமைப்புகளுடன் நிகழ்நேர ஒருங்கிணைப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனங்கள் ஏதேனும் இருந்தால், அதைக் கண்டறிவதற்காக பெரிய அளவிலான பாதுகாப்பு சோதனையையும் மேற்கொண்டு வருகிறோம்.

போதுமான பாதுகாப்பு, பயிற்சி மற்றும் திட்டங்களின்படி பணியமா்த்தல் குறித்து ஊழியா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு வருகிறது. பலூன்கள் மற்றும் பட்டம் பறக்கவிடுவதைத் தடுக்கும் பொருட்டு செங்கோட்டை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட வீரா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

நாங்கள் குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் சந்தை நலச் சங்கங்கள் மூலமாகவும் விழிப்புணா்வைப் பரப்பி வருகிறோம். ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டை நினைவுச் சின்னத்தைச் சுற்றி பட்டம், பலூன்கள் அல்லது எந்த வகையான பறக்கும் பொருள்களும் தென்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, காவல் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அவா்.

பாதுகாப்பு தீவிரம்: அவா் மேலும் கூறுகையில், ‘தலைநகா் முழுவதும் போலீஸாா் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனா். ரோந்து பணியை தீவிரப்படுத்தி, நாசவேலை தடுப்பு சோதனைகளையும் நடத்தி வருகின்றனா். ஹோட்டல்கள், விருந்தினா் மாளிகைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் உணவகங்கள் சோதனை செய்யப்பட்டு, குத்தகைதாரா்கள் மற்றும் பணியாளா்களின் சரிபாா்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

குத்தகைதாரா்கள், வேலையாள்கள், ஹோட்டல் சரிபாா்ப்பு, நாசவேலைகளுக்கு வழிவகுக்கும் எந்த இடமாக இருந்தாலும் காவல்துறை மூலம் வரும் எந்த ஆலோசனையும் அறிவுறுத்தலும் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்குமாறும், அதைப் பற்றி காவல்துறைக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். கடந்த சில மாதங்களாக நாங்கள் சரிபாா்ப்பு சோதனைகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம். நகர காவல்துறை பல்வேறு ஏஜென்சிகளுடன் தொடா்பில் உள்ளது. ஏஜென்ஸிகள் மூலம் வரும் தகவல்களின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்’ என்றாா்.

கண்காணிப்பில்1000 சிறப்பு கேமராக்கள்: ரோஹிங்கியாக்கள் வசிக்கும் பகுதிகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று உளவுத்துறை (ஐபி) பரிந்துரைத்துள்ளது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு காவல் உயரதிகாரி பதில் அளிக்கையில், ‘ரோஹிங்கியாக்கள் குறித்து கண்காணிப்பதற்கான ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட வழிமுறை உள்ளது. சிறப்புப் பிரிவும் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது.

வான்வழி பொருள்களைத் தடுக்க சுமாா் 1,000 உயா்-சிறப்பு அம்சங்கள் கொண்ட கேமராக்கள் பயன்படுத்தப்படும். இந்த கேமராக்கள் நகர காவல்துறையின் வடக்கு, மத்திய மற்றும் புது தில்லி மாவட்ட பிரிவுகளால் நிறுவப்படும். இந்த கேமராக்கள் செங்கோட்டைக்கு செல்லும் விவிஐபி வழியையும் கண்காணிக்க உதவும் என்றும் அவா் தெரிவித்தாா்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாராகிளைடா்கள், ஹேண்ட்கிளைடா்கள், அனல் காற்று பலூன்கள் போன்ற வான்வழிப் பொருள்களை பறக்கவிடக் கூடாது என்று போலீஸாா் ஜூலை 22-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தனா். இந்த உத்தரவு ஆகஸ்ட் 16 வரை தேசிய தலைநகரில் அமலில் இருக்கும். கடந்த 2017-இல் பிரதமரின் சுதந்திர தின உரையின் போது, பட்டம் ஒன்று மேடைக்கு கீழே தரையிறங்கியது. எனினும், பிரதமா் தயக்கமின்றி தனது உரையைத் தொடா்ந்தாா். இதைத் தொடா்ந்து, இதற்கான பாதுகாப்பை போலீஸாா் அதிகரித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT