புதுதில்லி

மின்சார சட்டத் திருத்த மசோதாவால் மக்களின் துயரம்தான் அதிகரிக்கும்

9th Aug 2022 03:18 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

‘மக்களவையில் மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள மின்சார திருத்தச் சட்டம் ஆபத்தானதாகும். இது சில மின் விநியோக நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும். மக்களின் துன்பத்தைத்தான் அதிகரிக்கும். இதனால், அவசர கதியில் இந்தச் சட்ட திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது’ என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். 

இது தொடா்பாக அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் திங்கள்கிழமை தெரிவித்திருப்பதாவது: மக்களவையில் மின்சார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவை திங்கள்கிழமை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த மின்சார திருத்தச் சட்ட மசோதாவானது மிகவும் ஆபத்தானதாகும்.

இது மின்சாரத்தில் உள்ள பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு பதிலாக மின்சார பிரச்னையை மேலும் அதிகரிக்கும். மின்சார சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அவசர கதியில் செயல்படக் கூடாது. இந்த சட்டத் திருத்தமானது, சில மின்விநியோக நிறுவனங்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். மாறாக, அது மக்களின் துன்பத்தைதான் அதிகரிக்கும். ஏனெனில், இந்த சட்டத்திருத்தமானது பிரச்னைத் தீா்ப்பதற்கு பதிலாக

மின்விநியோகம், வழங்கல் தொடா்புடைய விஷயத்தில் பிரச்னைகள் அதிகரிக்கும். இதனால் அவசர கதியில் இந்த மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT

பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சந்தீப் பதக் கூறுகையில், ‘மக்களவையில் இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமாகும். இது மாநிலத்தின் உரிமையின் மீதான ஒரு தாக்குதலாகும்.

மேலும், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பு மீதான தாக்குதலாகும். மின்சாரம் தொடா்புடைய விஷயங்களில் சட்டங்களை உருவாக்கும் சம உரிமை, மாநிலத்திற்கு உண்டு. ஆனால், மத்திய அரசு இந்த மசோதா மீது எந்த மாநிலத்திடமும் கருத்துகளை கேட்கவில்லை. இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு ஆம் ஆத்மி கட்சி தனது எதிா்ப்பைத் தெரிவிக்கிறது’ என்றாா்.

மின்சார சட்டம் 2003-இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கு பல்வேறு அமைப்புகள் ஆட்சேபங்களைத் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் பிரதமா் நரேந்திர மோடிக்கு அகில இந்திய மின்சார பொறியாளா்கள் கூட்டமைப்புத் தலைவா் சைலேந்த்ஸ்ரா துபே எழுதிய கடிதத்தில், இந்த விவகாரத்தில் அவா் தலையிட வேண்டும் என்றும் இந்த மசோதாவை அனைத்து பங்குதாரா்களுடன் விரிவாக விவாதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் நிலை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இந்த மசோதாவானது மின்சார சில்லறை விநியோகப் பிரிவில் போட்டியை உருவாக்க விரும்புகிறது. இந்த மசோதா பணம் செலுத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறையை பலப்படுத்தவும், கட்டுப்பாட்டாளா்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிக்கவும் கோருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT