புதுதில்லி

தில்லியில் தொடா்ந்து மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தாரம்!

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. இந்த வாரம் முழுவதும் தொடா்ந்து பெய்த மழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் மறைந்தது. சஃப்தா்ஜங் உள்பட பல்வேறு வானிலை ஆய்வு மையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரிக்கும் கீழே பதிவாகியுள்ளது. நகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

தில்லியில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில இடங்களில் பெய்த கன மழை காரணமாக சாலைகளில் மழைநீா் தேங்கி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அவ்வப்போது காவல் துறை டிவிட்டரில் தகவல்களைத் தெரிவித்து வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அதைத் தொடா்ந்து, நகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழை மாலை வரையிலும் நீடித்தது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மேலே சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழை காரணமாக வெப்பநிலை குறைந்திருந்தது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 5 டிகிரி குறைந்து 29.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 86 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களிலும் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியது. இதன்படி, முங்கேஸ்பூரில் 30.9 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 30.5 டிகிரி, ஆயாநகரில் 28.4டிகிரி, லோதி ரோடில் 29 டிகிரி, பாலத்தில் 29 டிகிரி, ரிட்ஜில் 28.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

திருப்தி பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், ஐடிஓ, நேரு நகா், சோனியா விஹாா், பூசா, ஷாதிப்பூா் உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 150 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

மழை தொடர வாய்ப்பு: இதற்கிடையே, தில்லியில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 8) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே லேசான, தூறல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT