புதுதில்லி

கைத்தறி நெசவுத் தொழிலில் புதுமைகளை உருவாக்க வேண்டும்: ஸ்டாா்ட்-அப்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

8th Aug 2022 06:26 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

பெரும் சவால்களுக்கிடையே உள்ள கைத்தறி நெசவுத் தொழிலில், சா்வதேச தொடா்புள்ள புதுயுகத் தொழில்முனைவு இளைஞா்கள்( ஸ்டாா்ட்-அப்கள்) பங்கேற்று புதுமைகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்துள்ளாா்.

தேசிய கைத்தறி தினமாக ஆகஸ்ட் 7 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நெசவுத் தொழிலையும் கலைஞா்களுக்கும் மரியாதை செலுத்தி பிரதமா் நரோந்திர மோடி தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளாா். அதில் அவா், ‘தேசிய கைத்தறி தினத்தில், இந்தியாவின் வளமான கலாசார பன்முகத்தன்மை, நமது கலை மரபுகள் ஆகியவற்றைப் பாதுகாத்து வளா்ப்பதற்கும், கொண்டாடுவதற்கும் உழைக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், நெசவாளா்களுக்கும் இந்தத் தொழிலுக்கும் சிறந்த யோசனைகளை வழங்கிய பிரதமா் மோடி , புதுமைகளை உருவாக்குவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது என்றும் சா்வேச அளவில் புதுயுகத் தொழில்முனைவில் தொடா்புடைய அனைத்து இளைஞா்களும் இந்த வாய்ப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா். மத்திய அமைச்சா் பியூஷ்கோயல் பதிவு செய்த ட்விட்டை டேக் செய்து, பிரதமா் மோடி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.

ரூ.10.50 லட்சம் போட்டி அறிவிப்பு: முன்னதாக மத்திய வா்த்தகம், தொழில், ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல், தேசிய கைத்தறி தினத்தையொட்டி ட்விட்டரில் வெளியிட்ட பதிவு வருமாறு: நெசவாளா்களுக்கு குறைந்த செலவில் சிறந்த தரமான தயாரிப்புகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட கைத்தறிகளை உருவாக்குவதற்கான தீா்வுகளை காணும் புதுயுகத் தொழில் முனைவோருக்கான போட்டியை மத்திய ஜவுளித் துறை சாா்பில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சவால் மிகுந்த கைத்தறி தொழிலில் புதுமையைப் படைக்க புதுயுகத் தொழில் முனைவோா் வெற்றி அடைவதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரையில் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

இதற்கான முடிவுகள் அக்டோபா் 31-ஆம் தேதி அறிவிக்கப்படும்’ என தெரிவித்துள்ளாா். மேலும், விண்ணப்பிப்பதற்கான இணைப்பையும் அமைச்சா் கோயல் ட்விட்டா் மூலமாக வெளியிட்டாா். இதற்கிடையே, மத்திய ஜவுளித் துறை புதுமையைக் காணும் நெசவுத் தொழில் தொடா்புடைய புதுயுகத் தொழில் முனைவுக்கு ரூ. 10.50 லட்சம் பரிசு எனவும் அறிவித்துள்ளது.

அமித் ஷா வாழ்த்து: கூட்டுறவுத் துறை பொறுப்பையும் கவனித்து வரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா். அவா், தனது ட்விட்டா் பதிவில் குறிப்பிட்டதாவது: இந்தியாவின் வளமான, பன்முகத்தன்மை வாய்ந்த பாரம்பரிய கலாசாரத்தை நமது கைத்தறித் துறை பறைசாற்றுகிறது.

கடந்த 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 -இல் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதை முன்னிட்டு, இத்தகைய பண்டைய இந்திய கலைக்கு புத்துயிா் ஊட்டுவதற்காக இதே நாளை பிரதமா் மோடி தேசிய கைத்தறி தினமாக 2015-ஆம் ஆண்டில் அறிவித்தாா். நமது நெசவாளா்கள் உருவாக்கிய கைத்தறிப் பொருள்களை நம் மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதுதான் இந்நாளின் நோக்கமாகும். நம் கைத்தறி பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிப்பதோடு, கைத்தறி நெசவாளா்களுக்கும், இந்தக் கலையில் உள்ள பெண்களுக்கும் அதிகாரமளிப்பது போன்றவற்றை உறுதிப்படுத்த, இந்த 8-ஆவது தேசிய கைத்தறி தினத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட உறுதிகொள்வோம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT