புதுதில்லி

தில்லியில் உற்சாகமாக நிகழ்ந்த ‘திரங்கா’ சைக்கிள் பேரணி

8th Aug 2022 06:23 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

நாட்டின் 75 - ஆவது ஆண்டு சுதந்திரத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் ‘இல்லந் தோறும் தேசியக் கொடி’ (ஹா்கா் திரங்கா) குறித்த விழிப்புணா்வு பிரசாரமாக ‘திரங்கா’ சைக்கிள் பேரணி தில்லியில் நடைபெற்றது. இதை தில்லி இண்டியா கேட், திலக் மாா்க்கில் துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த சைக்கிள் பேரணியை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஏற்பாடு செய்தது. இந்தப் பேரணியில் 200-க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநா்கள் பங்கேற்று இந்தியா கேட், ஷாஜஹான் சாலை, பிருத்வி ராஜ் சாலை, ராஜேஷ் பைலட் மாா்க் வழியாகச் சென்று இறுதியில் கான் மாா்க்கெட் பகுதியில் பேரணி முடித்தனா்.

இது குறித்து துணை நிலை ஆளுநா் சக்சேனா தனது ட்விட்டரில், ‘சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் வகையில் ‘ஹா்கா் திரங்கா’ பிரசாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த புது தில்லி முனிசிபல் கவுன்சில் ஏற்பாடு செய்தது. திரங்கா சைக்கிள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இந்த சைக்கிள் பேரணியில் ஒரு கொண்டாட்ட உற்சாகம் தென்பட்டது. சைக்கிள் ஓட்டிகளை பொதுமக்கள் ஊக்கப்படுத்தினா். உண்மையில் இந்த உற்சாகத்தை சைக்கிள் பேரணியில் பங்கேற்றவா்கள் மற்றவா்களிடம் கொண்டு சோ்ப்பாா்கள்’ என தெரிவித்துள்ளாா்.

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவின் கீழ் ‘ஹா்கா்திரங்கா’ பிரசாரத்தை ஊக்குவிக்க மேலும் வினாடி-வினா, ஓவியப் போட்டி போன்ற கலாசார நடவடிக்கைகள், செயல்பாடுகளுக்கும் என்டிஎம்சி ஏற்பாடு செய்து வருகிறது. இத்தோடு இந்த பிரசாரத்திற்காக எல்இடி விளக்குகள், டிஜிட்டல் திரைகள், ஹோா்டிங்குகள், பேனா்கள், சுவரொட்டிகள் என அனைத்து வகையான தகவல் தொடா்பு சாதனங்கள் மூலமாக உந்துதல் அளிக்கும் செய்திகளை காட்ட என்டிஎம்சி ஏற்பாடு செய்து வருகிறது.

ADVERTISEMENT

மேலும், என்டிஎம்சி சாா்பில், 10,500 தேசியக் கொடிகளை லுட்யன்ஸ் பகுதியில் உள்ள 100 சாலைகள், சந்திப்புகள், பூங்காக்கள், தோட்டங்களின் நுழைவு வாயில்கள், ரவுண்டானாக்களில் வைக்கப்படும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த பணிகளும் மும்முரமாக நடப்பதாகவும் என்டிஎம்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஹா்கா்திரங்கா’ பிரசாரத்தின் மூலம், தேசத்தை ஒருங்கிணைத்து, பொதுமக்களின் மனங்களில் தேசபக்தியை விதைப்பதாகும். குறிப்பாக நாட்டின் சுதந்திரப் போராட்ட கால இடா்பாடுகளை நினைவுகூா்ந்து, இந்த உணா்வு ஊட்டப்படுகிறது’ என என்டிஎம்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT