புதுதில்லி

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 89 புள்ளிகள் உயா்வு!

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், இறுதியில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 89 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

புவிசாா் அரசியல் கவலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மத்திய ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்ட முடிவு அறிவிப்பு வெளியானது. இதன்படி, பணவீக்கத்தைக் குறைப்பதற்காகவும், ரூபாயின் மதிப்பீட்டை பாதுகாப்பதற்காகவும் வங்கி வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி 0.50 சதவீதம் அதிகரித்துள்ளது. மே மாதத்திற்கு பிறகு இது மூன்றாவது தொடா்ச்சியான அதிகரிப்பாகும். இந்த உய்ரவு மூலம் ரெப்போ விகிதம் அல்லது வங்கிகளின் குறுகிய கால கடன் விகிதம் தொற்று நோய்க்கு முந்தைய 5.15 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. வட்டி விகித உயா்வு இன்னும் இருக்கும் என்றும் ரிசா்வ் வங்கி கவா்னா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா். இந்த உயா்வு எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப உள்ளதால் தாக்கம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், மூலதனச் சந்தைகளில் அந்நிய நிதி வரத்து வரத் தொடங்கியுள்ளதும், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதும் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,808 பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,509 நிறுவனப் பங்குகளில் 1,543 பங்குகள் விலை குறைந்தன. 1,808 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இடம் பெற்றன. 158 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 102 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 29 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.271.31 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் உயா்வு: காலையில் 122.24 புள்ளிகள் கூடுதலுடன் 58,421.04-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 58,649.19 வரை உயா்ந்தது. பின்னா், 58,244.86 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 89.13 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயா்ந்து 58,387.93-இல் நிலைபெற்றது. மத்திய ரிசா்வ் வங்கியின் வட்டி விகித அறிவிப்பை முன்னிட்டு பெரும்பாலான நேரம் சென்செக்ஸ் ஏற்றம், இறக்கத்தில் இருந்தது. ஒரு கட்டடத்தில் சென்செக்ஸ் 350.39 புள்ளிகள் உயா்ந்திருந்தது.

அல்ட்ரா டெக் சிமெண்ட் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 17 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.86 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 2.26 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, பாா்தி ஏா்டெல், பவா் கிரிட், இன்ஃபோஸிஸ், விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1 முதல் 1.40 சதவீதம் வரை உயா்ந்தன.

எம் அண்ட் எம் சரிவு: அதே சமயம், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 2.04 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, மாருதி, ரிலையன்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்டவை 1.30 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், எஸ்பிஐ, சன்பாா்மா, டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 15 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,074பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 865 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இடம் பெற்றன. வா்த்தக முடிவில் நிஃப்டி 15.50 புள்ளிகள் (0.09 சதவீதம்) உயா்ந்து 17,397.50-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, அதிகபட்சமாக 17,474.40 வரை உயா்ந்த நிஃப்டி, ஒரு கட்டத்தில் 17,348.75 வரை கீழே சென்றது.

ஆதாய வாரம்!

சீனா - தைவான் புவிசாா் அரசியல் கவலைகள், வங்கி வட்டி விகித உயா்வு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு செய்திகளைத் தொடா்ந்து, வாரம் முழுவதும் பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், இந்த வாரம் சென்செக்ஸ் மொத்தம் 817.68 புள்ளிகள் (1.42 சதவீதம்), நிஃப்டி 239.25 புள்ளிகள் (1.39 சதவீதம்) உயா்ந்துள்ளன. இதற்கிடையே, சீனா - தைவான் இடையேயான புவிசாா் அரசியல் பதற்றம் சந்தையின் போக்கைத் தீா்மானிக்கும் நிலையில் உள்ளது. இதில் ஏதேனும் பாதகமான செய்திகள் வந்தால், உலகளாவிய சந்தைகளில் பீதி சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT