புதுதில்லி

விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு பரிந்துரை அளிக்கும்: அமைச்சா் தகவல்

 நமது நிருபர்

விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைகளை நிா்ணயம் செய்யவும், குறைந்த செலவிலான வேளாண்மைக்கும் தேசிய அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளையொட்டி மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மத்திய வேளாண்மைத் துறை இணையமைச்சா் கைலாஷ் செளத்ரி மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா வேளாண்மை துறை தொடா்பான கேள்வியை எழுப்பினா். அப்போது அவா், வேளாண்மை மாநில பட்டியலில் இருக்கிறது. இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டுமே வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இப்படி மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால், மத்திய அரசின் பணி கேள்விக்குறியாக உள்ளது. விவசாயிகளின் உற்பத்திச் செலவை சந்திக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை 200 சதவிகிதம் வரை உயா்த்துவதற்கு அரசிடம் ஏதேனும் திட்டங்கள் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு இணையமைச்சா் கைலாஷ் செளத்ரி பதில் அளித்தது வருமாறு: மத்திய அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்மையை பன்முகப்படுத்துதல், இயற்கை விவசாயம், குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) போன்றவற்றைப் பரிசீலனை செய்து இந்தக் குழு பரிந்துரைகளை அளிக்கும். இதில் விவசாயிகள் பிரதிநிதிகள், மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள், வேளாண்மை விஞ்ஞானிகள், வேளாண்மைப் பெருளாதார நிபுணா்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

இவா்கள் ‘ஜீரோ பட்ஜெட்’ அடிப்படையிலான வேளாண்மையை ஊக்குவிக்கவும், நாட்டில் மாறிவரும் தேவைகளை மனதில் கொண்டும் பயிா் முறையை மாற்றவும் எம்எஸ்பியை மிகவும் பயனுள்ளதாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்தும் வகையில் இந்தக் குழு பரிந்துரைகளை அளிக்கும். அதனடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளாா் அமைச்சா்.

இதே விவகாரத்தில் முன்னதாக கடந்த வாரம் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசியத் துணைத் தலைவா் வேட்டவலம் மணிகண்டன் தலைமையிலான தமிழக குழுவினா், வேளாண்மைத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தனா். அதில் ‘கடந்த ஜூலை 12- ஆம் தேதி வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்காக பிரதமா் அறிவித்த குழுவில், முன்னாள் வேளாண்மைத் துறை செயலா் சஞ்சய் அகா்வால் தலைமையில் அரசுப் பிரதிநிதிகள், வேளாண்மை நிபுணா்கள், விவசாயப் பல்கலைக்கழக பிரதிநிதிகள், விவசாயக் கூட்டுறவு நிறுவனங்கள், ஒரு சில மாநில அரசுப் பிரதிநிதிகள், வடஇந்திய விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா். ஆனால், தமிழகத்தின் பிரதிநிதிகள் இதில் இடம் பெறவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT