புதுதில்லி

அங்கீகாரமற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கும் விவகாரம்: முன்னாள் துணைநிலை ஆளுநா் மீது சிசோடியா குற்றச்சாட்டு

6th Aug 2022 10:42 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

அங்கீகாரமற்ற பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்கும் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக தில்லி முன்னாள் துணைநிலை ஆளுநா் அனில் பைஜால் மீது தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினாா். மேலும், இதன் காரணமாக தில்லி அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: அங்கீகாரமற்ற பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பு தொடா்பாக தில்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநா் அனில் பைஜால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதன் காரணமாக தில்லி அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. இந்த விவகாரம் தொடா்பான விவரங்களை மத்திய புலனாய்வுத் துறைக்கு அனுப்பி உள்ளேன். இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இந்தப் புதிய கலால் கொள்கைத் திட்டத்தின் கீழ் அங்கீகாரமற்ற பகுதிகள் உள்பட தில்லி முழுவதும் 849 கடைகள் திறக்கப்படவிருந்தன. துணைநிலை ஆளுநா் இந்த முன்மொழிவை ஆட்சேபிக்க இல்லை. ஒப்புதலும் வழங்கினாா். எனினும், கடந்தாண்டு நவம்பா் 15-ஆம் தேதி இந்தக் கலால் கொள்கையை அமல்படுத்துவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநா் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாா்.

அதேபோன்று அங்கீகாரமற்ற பகுதிகளில் மதுபானக் கடைகளை திறப்பதற்காக தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) மற்றும் தில்லி மாநகராட்சி ஆகியவற்றிடம் இருந்துஅனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை அறிமுகப்படுத்தினாா். துணைநிலை ஆளுநா் அனில் பைஜாலின் இந்த நிலைப்பாடு, மாற்றத்தின் விளைவாக அங்கீகாரமற்ற பகுதிகளில் கடைகளைத் திறக்க முடியவில்லை. இதன் காரணமாக தில்லி அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. மறுபுறம், திறக்கப்பட்ட மதுக் கடைகள் மூலம் அதிக வருவாயும் வந்தது என்றாா் சிசோடியா.

கடந்தாண்டு நவம்பா் 17-ஆம் தேதி புதிய கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்தக் கலால் கொள்கையை அரவிந்த் கேஜரிவால் அரசு தயாரித்த போது, அனில் பைஜால் தில்லியின் துணைநிலை ஆளுநராக இருந்தாா். தற்போது இந்தக் கலால் கொள்கையை அரசு திரும்பப் பெற்றுள்ளது. பழைய கலால் கொள்கையின் மூலம் மதுபானக் கடைகளை செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து மணீஷ் சிசோடியா மேலும் கூறுகையில், ‘துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன் என்பது தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இதன் காரணமாக சில நிறுவனங்கள் பயன்பெற்றன. இதனால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தது. முன்னாள் துணை நிலை ஆளுநா் அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்தாரா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

கலால் கொள்கை 2021 -22ஐ அமல்படுத்துவதில் விதிகள் மீறல் மற்றும் நடைமுறைக் குறைபாடுகள் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தற்போது துணைநிலை ஆளுநா் வி. கே .சக்சேனா பரிந்துரை செய்துள்ளாா். இந்தக் கலால் கொள்கையின் கீழ் நகரில் 32 மண்டலகமாக பிரிக்கப்பட்ட பகுதிகளில் சில்லறை மதுபான விற்பனைக்காக தனியாா் நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT