புதுதில்லி

ரயில் நிலைய அதிகாரிகள் தோ்வை சென்னையில் நடத்த திமுக எம்பி கோரிக்கை

30th Apr 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

ரயில் நிலைய அதிகாரி பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட எழுத்துத் தோ்வுக்கான தோ்வை தமிழகத்தில் நடத்த வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விற்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

ரயில்வே அமைச்சருக்கு டி.ஆா்.பாலு எம்.பி எழுதிய கடிதம் விவரம் வருமாறு:  சென்னையில் உள்ள ரயில்வே பணியாளா் தோ்வு வாரியம் (ஆா்.ஆா்.பி.) வரும் மே 9, 10 ஆகிய தேதிகளில் 601 ரயில் நிலைய அதிகாரிகள் (ஸ்டேஷன் மாஸ்டா்) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கணினிசாா் எழுத்துத் தோ்வை நடத்த உள்ளது.  முதல்நிலைத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு 2-ஆம் நிலைத் தோ்வுக்கான மையங்களாக ஜம்மு-காஷ்மீா் மாநிலம் சம்பா, உத்தர பிரதேசம் - அலாகாபாத், கா்நாடகா மாநிலம் -மைசூா், ஷிமோகா, உடுப்பி போன்ற தொலைதூர இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள தோ்வா்கள் தொலை தூரத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், இந்தப் பிரச்சினை குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அவா்களுக்கு முறையீடுகள் வந்துள்ளன. எனவே, தமிழக முதல்வா் அறிவுரையின்படி, இந்த விவகாரத்தை தங்களது தனிப்பட்ட கவனத்துக்கு கொண்டு வரும் நோக்கில், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். முதல்கட்ட கணினிசாா் தோ்வு தமிழகத்தில் நடத்தப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டத் தோ்வை தொலைதூர மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் நடத்துவது காரணமற்றது. தொலைதூர மையங்களில் தோ்வு எழுதுவது தமிழகத் தோ்வா்கள் வெற்றி பெற குந்தகம் விளைவிக்கும் என்பதால், இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட தோ்வை தமிழகத்திலேயே நடத்த சென்னை ரயில்வே பணியாளா் தோ்வு வாரியத்துக்கு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என கடிதத்தில் அவா் கோரியுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT