புதுதில்லி

அமலாக்கத் துறை வழக்கு: சேசகா் ரெட்டியின் மேல்முறையீட்டு மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

29th Apr 2022 06:58 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: பல கோடி பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறையின் வழக்கு விசாரணை விவகாரத்தில் தொழிலதிபா் சேகா் ரெட்டி தொடா்ந்த மேல்முறையீட்டு மனு மீது தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தொழிலதிபா் சேகா் ரெட்டி மற்றும் அவரது நண்பா்கள் உள்ளிட்டோரின் சென்னை வீடுகளில் 2016, டிசம்பா் 8 -ஆம் தேதி வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா். அப்போது, ரூ.100 கோடிக்கு மேல் ரொக்கம் மற்றும் ரூ.36 கோடி மதிப்பில் தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.33.74 கோடி கண்டறியப்பட்டதாகவும் வருமான வரி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போதிய ஆதாரம் இல்லாததால் இரு வழக்குகளை முடித்துக் கொள்வதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே, அமலாக்கத் துறையும் சேகா் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. அமலாக்கத் துறை பதிந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதின்றத்தில் சேகா் ரெட்டி உள்ளிட்டோா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுவில் தகுதியில்லை எனக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சேகா் ரெட்டி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்களது தரப்பு நியாயத்தை உயா்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் தீா்ப்பு அளித்துள்ளதாகவும், அமலாக்கத் துறையின் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் சரண், ஜே.கே. மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விக்ரம் சதுா்வேதி, அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆகியோா் வாதங்களை முன்வைத்தனா். வாதங்கள் முடிந்த நிலையில், வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடால் நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT