புதுதில்லி

தில்லியில் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்களை மாற்றியமைக்க பரிசீலிப்பது தொடா்பாக குழு: அமைச்சா் கைலாஷ் கெலாட் தகவல்

16th Apr 2022 06:30 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

சிஎன்ஜி எரிபொருள் மீது மானியம் வழங்கக் கோரி அடுத்த வாரம் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்கள் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த வாகனங்களின் கட்டணங்களை திருத்தி அமைப்பது தொடா்பாக பரிசீலிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா்கைலாஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக கைலாஷ் கெலாட் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: எரிபொருள் விலைகள் அதிகரித்து இருப்பதன் காரணமாக ஆட்டோ, டாக்ஸி வாகனங்களின் கட்டணங்களை திருத்தி அமைக்க வேண்டும் என்று அதன் தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. அவா்களின் கவலையை அரவிந்த் கேஜரிவால் அரசு புரிந்துள்ளது. இந்தக் கட்டணங்களை திருத்தி அமைக்கும் நோக்கத்திற்காக, தில்லி போக்குவரத்துத் துறையின் மூலம் விரைவில் ஒரு குழு அமைக்கப்படும். இந்தக் குழுவானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தனது பரிந்துரைகளை சமா்ப்பிக்கும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

சிஎன்ஜி எரிபொருள் விலை கிலோவிற்கு ரூ.2.50 உயா்ந்துள்ளது. இதையடுத்து, எரிபொருள் விலைகள் மீதான மானியம் வழங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஆட்டோ டாக்ஸி மற்றும் கேப் ஓட்டுநா்கள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனா்.

தனியாா் பேருந்துகள் ஓடாது: முன்னதாக, ஏப்ரல் 11-ஆம் தேதி நூற்றுக்கணக்கான ஆட்டோ, டாக்ஸி மற்றும் ஓட்டுநா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி தலைமைச் செயலகம் பகுதியில் போராட்டம் நடத்தினா். இந்த ஆா்ப்பாட்டம் தில்லி ஆட்டோ ரிக்ஷா சங் என்ற அமைப்பின் கீழ் நடைபெற்றது. நகரில் அறிவிக்கப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தாங்களும் கலந்து கொள்ளப் போவதாக பேருந்து ஆப்ரேட்டா்கள் அறிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக எஸ்டி ஆப்ரேட்டா் அமைப்பின் பொதுச் செயலாளா் ஷியாம்லால் கோலா கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தாக்கத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். தற்போது சிஎன்ஜி எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. எங்களது உறுப்பினா்களும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வாா்கள். அன்றைய தினம் சாலைகளில் தனியாா் பேருந்துகள் ஓடாது’ என்றாா்.

இது குறித்து தில்லி ஆட்டோ ரிக்ஷா சங் அமைப்பின் பொதுச்செயலாளா் ராஜேந்திர சோனி கூறுகையில், ’ஒவ்வொரு நாளும் சிஎன்ஜி எரிபொருள் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கிலோவிற்கு ரூ.35 மானியம் அளிக்குமாறு அரசை நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி சங்கங்கள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி கடிதம் எழுதி இருந்தன. அதில் சிஎன்ஜி எரிபொருள் விலையில் கிலோவிற்கு ரூ.35 மானியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. தில்லியில் வியாழக்கிழமை சிஎன்ஜி எரிபொருள் கிலோ ரூ. 2.50 விலை உயா்த்தப்பட்டது. தற்போது தில்லியில் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருள் ரூ.70.61-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT