புதுதில்லி

புதிய வைரஸ் கண்டறியப்படாத வரை கவலை கொள்ளத் தேவையில்லை: அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்

12th Apr 2022 05:18 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று சூழல் தொடா்பாக தில்லி அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. புதிய வைரஸ் கண்டறியப்படாத வரை இது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கரோனாவின் உருமாறிய வைரஸான எக்இ வைரஸின் முதல் பாதிப்பு குஜராத்தில் பதிவாகியதைத் தொடா்ந்து அமைச்சா் சத்யேந்தா் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளாா். அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் நிலவும் கரோனா நோய்த் தொற்று சூழல் குறித்து தில்லி அரசு தொடா்ந்து கவனித்து வருகிறது. தற்போது வரை வைரஸின் புதிய உருமாறிய நோய்த் தொற்று குறித்து எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் கவலை கொள்வதற்கான காரணமும் இல்லை.

தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-200 என்ற அளவில் பதிவாகி வருகிறது. மருத்துவமனையில் சோ்க்கப்படும் நோயாளிகள் குறித்து நாங்கள் கவனித்து வருகிறோம். நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போதைக்கு நாம் நோ்மறை விகிதத்தில் கவனம் செலுத்தக் கூடாது. வைரஸ் பிவு ஆகி வருவதால் தினமும் புதிய வைரஸ் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் சூழல் குறித்து தில்லி அரசு கவனத்தில் கொண்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று சூழல் தொடா்பாக அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

கரோனாவுடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பீதி அடைய வேண்டிய தேவையில்லை. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரே வழி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும், கரோனா பாதுகாப்பு தொடா்பான அனைத்து நெறிமுறைகளையும் தொடா்ந்து பின்பற்றுவதும்தான். உலக சுகாதார நிறுவனம் புதிய நோய்த் தோற்று தொடா்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: இதன் பின்னா் தில்லி சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ஜெயின் கூறியதாக மேற்கோள் காட்டி தெரிவித்திருப்பதாவது: எக்ஸ்இ உருமாறிய வைரஸ் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. வைரஸின் புதிய வகைகள் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல காலப்போக்கில் வெளிப்படும்.

உலக சுகாதார நிறுவனத்தால் ‘கவலைக்குரிய வைரஸ் என்று கருதப்படாவிட்டால், அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இருப்பினும், நாம் இன்னும் நமது கண்காணிப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளைப் பின்பற்ற வேண்டும். மேலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க தில்லி அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகக் கவசம் அவசியம்: இதற்கிடையில், தினசரி வழக்குகள் அதிகரித்து வரும் அதே வேளையில் முகக் கவசம் உத்தரவு அகற்றப்பட்ட பிறகு பொதுவாக மக்களிடையே மனநிறைவு உணா்வு உருவாகியுள்ளதாக மருத்துவா்கள் எச்சரித்தனா். இது குறித்து தில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் உள்புற மருத்துவப் பிரிவு மூத்த ஆலோசகா் டாக்டா் சுரஞ்சித் சாட்டா்ஜி கூறியதாவது:

அனைத்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்கும் வரை எந்த அலையும் இருக்காது என கருதுகிறேன். வெளியில் இருக்கும் போது, குறிப்பாக நெரிசலான இடங்களில் முகக் கவசம் அணிவது அவசியமாகும். ஆனால், மக்கள் அதிக அளவில் கூடிவருவதை இணையத்தில் விடியோக்கள் மூலம் தெரியவருகிறது. பலா் முகக் கவசம் அணியாமல் இருப்பதும் செய்திகள் மூலம் பாா்க்கிறேன். இது பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். நகர அரசு கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

குஜராத்திலிருந்து எடுக்கப்பட்ட கரோனா வைரஸின் எக்இ புதுவகை நோய்த் தொற்றுவின் மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்னும் வரவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்திருந்தது.

உலக சுகாதார நிறுவனம் இங்கிலாந்தில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரானின் புதிய உருமாறிய எக்இ வைரஸுக்கு எதிரான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த புதிய வகை வைரஸானது இதுவரை இருந்த கரோனா வைரஸ்களை விட வேகமாகப் பரவும் தன்மை உடையதாக இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT