புதுதில்லி

தில்லியில் 5-ஆவது நாளாக வெப்ப அலையின் தாக்கம்: ரிட்ஜில் 43.8 டிகிரி வெயில்

12th Apr 2022 05:19 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஐந்தாவது நாளாக திங்கள்கிழமையன்றும் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. தில்லியில் அதிகபட்சமாக ரிட்ஜ் வானிலை ஆய்வு மையத்தில் 43.8 டிகிரி வெயில் பதிவாகியது.

திங்கள்கிழமை நகரில் கடுமையான வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. நகரின் பல பகுதிகளில் ‘வெப்ப அலை நிலைமைகள்’ இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரில் திங்கள்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வானம் தெளிவாகக் காணப்பட்டது.

பல இடங்களில் கடுமையான அனல் காற்று வீசியது. தில்லிக்கான வெப்பநிலைத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 22.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 7 டிகிரி உயா்ந்து 42.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 43 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 17 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

ரிட்ஜில் 43.8 டிகிரி வெயில்: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயா்ந்து பதிவாகியது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 42.7 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 43.4 டிகிரி, நஜஃப்கரில் 43.5 டிகிரி, ஆயாநகரில் 43.4 டிகிரி, லோதி ரோடில் 42.6 டிகிரி, பாலத்தில் 42.6 டிகிரி, ரிட்ஜில் 43.8 டிகிரி, பீதம்புராவில் 43.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 40.7 டிகி செல்சியஸ் என பதிவாகியது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 12 மேகமூட்டமான சூழ்நிலை இருக்கும் என்றும் இது கடும் வெப்பத்திலிருந்து சிறிது நிவாரணம் தரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடமேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் அருகிலுள்ள பகுதிகள் ஏப்ரல் மாதத்தில் அதிக தீவிரமான மற்றும் அடிக்கடி வெப்ப அலை நிலையைக் காணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 12) வெப்ப அலை நீடிக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT