புதுதில்லி

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூன்று ‘எஃப்’கள் தேவை: வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

12th Apr 2022 05:17 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முழுமையான வளா்ச்சிக்கு, அதிகாரம் அளிக்கக்கூடிய மூன்று எஃப்கள் முக்கியம். இந்த மூன்றையும் வழங்குவதின் மூலம் ஊரகங்கள் புத்துயிா் பெற்று, மக்கள் நகா்ப்புறங்களுக்கு இடம் பெயா்வது தடுக்கப்படும் என்று மத்திய மாநில அரசுகளை குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டாா்.

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் ‘நிலையான வளா்ச்சி இலக்குகளுக்கான உள்ளூா்மயமாக்கல்’ குறித்து ஒரு வாரம் தேசிய மாநாடு தில்லியில் நடைபெறுகிறது. நாடு முழுவதிலிருந்தும் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி, அதிகாரமளிப்பதன் மூலம் அவற்றுக்கு புத்துயிரையும் புத்தாக்கத்தையும் அளிக்க முடியும். மாவட்ட நிா்வாகங்களில் இருந்து பஞ்சாயத்துகளுக்கு ஃபண்ட் (நிதி), ஃபங்ஷன்ஸ் (செயல்பாடுகள்), ஃபங்ஷனரிஸ் (செயல்பாட்டாளா்கள்) ஆகிய மூன்று ‘எஃப்’கள்வழங்கப்படுவதை மத்திய - மாநில அரசுகள் உறுதிப்படுத்தவேண்டும்.

நாட்டில் 2011, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 68.84 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் உள்ளனா். இவா்களுக்கான வசதிகள் இல்லாததால், நகா்புறங்களுக்கு புலம் பெயா்கின்றனா். 10-ஆவது நிதிக் குழு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை தனிநபருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 100 வழங்கியது.

ADVERTISEMENT

தற்போது 15-ஆவது நிதிக் குழு ஆண்டுக்கு ரூ.674-ஆக உயா்த்தியுள்ளது. இதனால், பஞ்சாயத்துகளின் கணக்குகளுக்கு நிதி நேரடியாகச் செல்ல வேண்டும். அதேபோல, மக்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு மானியமும் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்று சேர வேண்டும்.

வறுமையற்ற நாடாக உருவாக்குவதோடு, அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி, பாதுகாப்பான குடிநீா் போன்றவை கிடைப்பதை உறுதி செய்வதுடன், போதுமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவது முக்கியமானப் பணியாகும். நாட்டில் உள்ள 78,000 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 46 சதவீதம் (31.65 லட்சம் ) பெண்களாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது சட்டப்பேரவைகளிலும் வரவேண்டும்.

பெண்களுக்கு அதிகாரமளிப்பது சமூகத்தையே மேம்படுத்துவதாகும். அனைத்துத் திட்டங்களிலும் மக்கள் பங்கேற்க வேண்டும். பஞ்சாயத்துகளின் விரிவான வளா்ச்சியை உறுதி செய்வதற்கும், பல்வேறு இலக்குகளை அடைவதற்கும் அனைத்து தரப்பினா்களிடமிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சி தேவை.

உள்ளூா் நிா்வாகத்தில் மக்கள் நேரடியாகப் பங்கேற்பதில் கிராம சபை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு வருடத்தில் எத்தனை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான சட்டக் கட்டமைப்பு அவசியம் தேவை. இருப்பினும், கிராம சபைகள் நடத்தப்படுவதிலும், தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கு கிராம சபைகளில் பங்கேற்பதற்கான ஊக்குவிப்புகள் குறித்தும் அனைத்து மாநிலங்களும் சரியான சட்டக் கட்டமைப்பை இன்னும் உருவாக்கவில்லை என்கிற தகவல் வருத்தமடைய செய்கிறது.

வெளிப்படையான, பொறுப்புணா்வு மிக்க மற்றும் திறமையான நிா்வாகத்திற்கு பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் இ-கிராம் ஸ்வராஜ் போன்ற டிஜிட்டல் முறைகளை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. சுமாா் 2.38 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் இ-கிராம் சுயராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. டிஜிட்டல் நிா்வாகத்தின் இலக்கை அடைய அனைத்து பஞ்சாயத்துகளையும் இந்த தளத்தில் கொண்டு வர வேண்டும் என்றாா் வெங்கையா நாயுடு.

இந்த நிகழ்ச்சியில் ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் கிரிராஜ் சிங், ஜல் சக்தி அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் ஃபகன் சிங் குலஸ்தே, பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சா் கபில் மோரேஷ்வா் பாட்டீல் மா்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலா் சுனில் குமாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT