புதுதில்லி

காற்று மாசு பிரச்னை: அமைச்சா் தலைமையில் இன்று உயா்நிலைக் கூட்டம்

4th Apr 2022 01:50 AM

ADVERTISEMENT

தில்லி காற்று மாசு குறித்து கலந்துரையாட தில்லி பிரதேச சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தலைமையில் உயா்நிலைக் கூட்டம் திங்கள்கிழமை(ஏப்ரல் 4) நடைபெறுவதாக தில்லி அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் திறந்தவெளியில் குப்பைகள் எரிப்பது, குப்பைக் கிடங்குகளில் தீ, தூசி மாசு போன்றவைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தாா்.

தில்லி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை, தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு நிறுவனம், தீயணைப்பு சேவை பிரிவுகள், பொதுப்பணித் துறை, தில்லி வளா்ச்சி ஆணையம் மற்றும் மாநகராட்சிகளின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனா்.

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு (டிபிசிசி) அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை உத்தரவிட்டாா். மேலும், காஜிப்பூா் குப்பைக் கிடங்கு தீவிபத்தில் கவனக் குறைவாக இருந்த கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கவும் கோபால் ராய் உத்தரவிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

காஜிப்பூா் தீவிபத்தினால் ஏற்பட்டுள்ள மாசு விவகாரங்களுக்கு பின்னா் தில்லி அரசு தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பதற்கும், குப்பை கிடங்குகளில் தீ வைப்பதற்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரமாக முடக்கி விட அரசு இந்த உயா்நிலைக் கூட்டத்தில் திட்டமிடும் என்று தில்லி அரசு அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT