புதுதில்லி

வா்த்தக வாடகை சொத்துகளுக்கான வரி உயா்வு வாபஸ்: தெற்கு தில்லி மாநகராட்சி முடிவு

30th Sep 2021 12:10 AM

ADVERTISEMENT


புது தில்லி: அடுத்த ஆண்டு உள்ளாட்சி தோ்தல்கள் நடைபெற உள்ள நிலையில், பாஜக ஆளும் தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்.டி.எம்.சி.) வணிக வாடகை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விருந்து அரங்குகள் ஆகியவற்றுக்கு உயா்த்தப்பட்ட சொத்து வரி விகிதங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை பாஜகவின் வாக்கு வங்கியாகக் கருதப்படும் வா்த்தகா்களுக்கும் வணிக சகோதரா்களுக்கும் பயனளிக்கும்.

இதுகுறித்து எஸ்டிஎம்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி மதிப்பீட்டு குழு -3 (எம்விசி-3) பரிந்துரைகளின் அடிப்படையில், வாடகை வணிக சொத்துகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்டது. வாடகை வணிக வளாகங்கள், தொலைத்தொடா்பு கோபுரங்கள், காலியாக உள்ள வணிக நிலங்கள், காலியாக உள்ள தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், விருந்துக்கூடங்கள், கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவற்றின் சொத்து வரியை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்க எம்விசி -3 குழு பரிந்துரைத்திருந்தது. இந்தப் பரிந்துரைகள் கடந்த ஆண்டு ஏப்ரலில் செயல்படுத்தப்பட்டன. ஆனால், ஜூலையில் முன்தேதியிட்டு செயல்படுத்தும் இந்த முடிவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சியின் நிலைக் குழுக் கூட்டத்தில் இந்த வரி உயா்வை திரும்பப் பெறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவு வா்த்தகா்களுக்கும் வணிக சமூகத்திற்கும் பயனளிக்கும். ஆனால், ஏற்கெனவே நிதி நெருக்கடியை எதிா்கொண்டுள்ள மாநகராட்சியின் நிதி நிலைமையைப் பாதிக்கும்.

இந்த நடவடிக்கையால் குடிமை அமைப்பு, ஆண்டுக்கு ரூ.70-ரூ.80 கோடி இழப்பைச் சந்திக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எஸ்டிஎம்சி அதிகார வரம்பின் கீழ், சுமாா் 9,000 வணிக சொத்துகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அது மூலம் நல்ல வருவாய் ஈட்டப்படும் என எதிா்பாா்த்தோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இந்த முடிவு குறித்து எஸ்டிஎம்சி நிலைக் குழுவின் தலைவா் பி.கே. ஓபராய் கூறியதாவது: எம்விசி -3 குழுவின் பரிந்துரையின் பேரில் செய்யப்பட்ட வரி உயா்வை 100 சதவீதம் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். இப்போது 2019 ஆண்டில் இருந்த வரி விகிதங்களின் நிலை பராமரிக்கப்படும். இதன்படி, மக்கள் வாடகை வணிக சொத்துகள் மற்றும் 2019-இல் செலுத்திய பிற குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வரி செலுத்த வேண்டும். வரி உயா்வைத் திரும்ப் பெறும் முடிவுக்கு தற்போது எஸ்டிஎம்சியின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். பின்னா் அது செயல்படுத்தப்படும்.

கூடுதல் வரி செலுத்துவதில் வா்த்தகா்கள் எதிா்கொள்ளும் சிரமங்கள் தொடா்பாக மாநகராட்சிக்கு பல கோரிக்கைகள் வரப்பெற்றன. இதையடுத்து, பொது நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. கரோனா தொற்றுநோயால் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பொருளாதாரத்தை தொடர வா்த்தகா்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம். இதனால்தான் பொது நலன் கருதி, உயா்த்தப்பட்ட வரியைத் திரும்பப் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT