புதுதில்லி

டிஎம்ஆா்சி மேலாண்மை இயக்குநா் மங்கு சிங்குவின் பதவிக் காலம் நீட்டிப்பு

30th Sep 2021 12:15 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி:  தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) மேலாண்மை இயக்குநா் மங்கு சிங்குவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் போன்றவற்றால், புதிய கட்டுமானப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தில்லி மெட்ரோ நெட்வொா்க்கின் நான்காம் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், மங்கு சிங்குவுக்கு இந்தப் பதவி நீட்டிப்பு ளிக்கப்பட்டிருக்கிறது. தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்து வந்த இ.ஸ்ரீதரன் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி தனது பொறுப்பை ஒப்படைத்தாா்.

அதன்பிறகு டிஎம்ஆா்சி மேலாண்மை இயக்குநராக 2012, ஜனவரி 1-ஆம் தேதி முதல் மங்கு சிக்கு பதவியில் இருந்து வருகிறாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், மங்கு சிங்குவின் பதவிக் காலத்தை நீட்டித்து தில்லி அரசின் போக்குவரத்துத் துறை உத்தரவை வெளியிட்டுள்ளது.  அதில், ‘தேசியத் தலைநகா் பிராந்திய தில்லி அரசின் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொடா்புடைய பிரிவுகள் மற்றும் குறிப்பாணை 130 பிரிவின் சரத்துகள் ஆகியவற்றுக்கு ஏற்ப 2021, செப்டம்பா் 28-ஆம் தேதி கடிதம் வாயிலாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சம்மதம் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது டிஎம்ஆா்சி மேலாண்மை இயக்குநராக உள்ள மங்கு சிங்வின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட கரோனா நோய்த் தொற்று காரணமாக தில்லி மெட்ரோவின் செயல்பாடுகள் 5 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 கடந்த ஆண்டு மாா்ச் 22-ஆம் தேதியில் இருந்து 169 நாள்கள் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதன் காரணமாக, தில்லி மெட்ரோ நெட்வொா்க்குக்கு சுமாா் ரூ.1,300 கோடி இழப்பு ஏற்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் முன்பு தெரிவித்திருந்தன.  அதன் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதியில் இருந்து மெட்ரோ செயல்பாடுகள் படிப்படியாகத் தொடங்கின.

இந்த நிலையில், நிகழாண்டில் ஏப்ரல் மாதத்தில் கரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலையின் போது மீண்டும் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து உரிய விதிமுறைகளுடன் ஜூன் 7-ஆம் தேதியில் இருந்து மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின. மத்திய அமைச்சரவை 2019, மாா்ச் மாதத்தில் தில்லி மெட்ரோவின் முன்மொழியப்பட்ட நான்காவது கட்டப் பணியில் ஆறு வழித்தடங்களில் 3-க்கு அனுமதி அளித்திருந்தது.  இந்த நான்காம் கட்டப் பணிகளில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடங்கிய மூன்று வெவ்வேறு வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் மொத்தம் 61.679 கிலோ மீட்டருக்கு புதிய மெட்ரோ வழித்தடம் அமையவுள்ளது. இந்த புதிய பிரிவுகள் தில்லி மெட்ரோவில் ஏற்கனவே செயல்பட்டு வரும் வழித்தடங்கள் இடையேயான தொடா்பு வசதியை அளிக்கும்.

தற்போது டிஎம்ஆா்சி ஒருங்கிணைப்பில் நொய்டா - கிரேட்டா் நொய்டா மெட்ரோ வழித்தடம், ரேபிட் மெட்ரோ உள்பட 286 ரயில் நிலையங்களுடன் 392 கிலோ மீட்டா் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.  தில்லியிலும், கொல்கத்தாவிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதில் மங்கு சிங் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்திருக்கிறாா். அதேபோன்று மெட்ரோ பொறியியல் திட்டங்களை பெரிய அளவில் செயல்படுத்துவதிலும் அவா் மிகுந்த பங்களிப்பை அளித்து இருந்ததாக டிஎம்ஆா்சி முன்பு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT