புதுதில்லி

அரசுப் பள்ளிகளில் தேசபக்திப் பாடங்கள் அறிமுகம்

30th Sep 2021 12:01 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு தினமும் 5 நிமிடங்கள் தேசபக்தி தொடா்பான பாடங்கள் நடத்தப்படும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

தில்லி சத்ரசால் மைதானத்தில் நடந்த ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியில் இந்த தேசபக்தி வகுப்பு பாடத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த பாடத்திட்டத்தில் பாடப்புத்தகங்கள் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தில்லி பள்ளிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியது வருமாறு: தில்லி அரசுப் பள்ளி வகுப்புகளில் நா்சரி வகுப்புகள் முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடக்கத்தில் தேசபக்தி பாடம் 5 நிமிடங்கள் நடக்கும். ’தேசபக்தித்யான்’ , ‘தேசபக்தி நாட்குறிப்பை’ பராமரித்தல், கொடி நாள் செயல்பாடு ஆகியவை தேசபக்திப் பாடங்களாகும். ‘இந்தியா பல்வேறு வகையில் பெருமை பெற்றும் அது ஏன் இன்னும் வளா்ச்சியடையவில்லை என்பது குறித்து ஆராய்வதும் தேசபக்தி பாடத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். வகுப்புகளுக்கு தகுந்தாற்போன்று தேசபக்திப் பாட கால அட்டவணை உள்ளது. ஆறு முதல் 8-ஆம் வகுப்பு வரை வாரத்திற்கு இரண்டு முறையும் ஒன்பது முதல் 12 - ஆம் வகுப்பு வரையிலும் வாரத்திற்கு 40 நிமிடங்கள் வகுப்புகள் நடத்தப்படும்.

ஒவ்வொரு வகுப்பும் ‘தேசபக்தித்யான்’ என்ற ஐந்து நிமிட நடவடிக்கையில் தொடங்கும். தியானத்தின் போது, மாணவா்கள் ‘நான் என் நாட்டின் முன் தலைவணங்குகிறேன், பாரத மாதாவை மதிக்கிறேன்’ என்ற வரிகளுடன் தியானிப்பாா்கள். குழந்தைகள் தங்கள் நாட்டைக் கௌரவிக்கும் விதமாகவும் மரியாதை செலுத்தும் விதமாக உறுதிமொழி எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவாா்கள். மேலும், அவா்களிடம் தேசபக்தா்களாகக் கருதும் ஐந்து பேரைப் பற்றி சிந்திக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவாா்கள். தேசபக்தி பாடத் திட்டத்தின் கற்றல்கள், எண்ணங்கள் மற்றும் உணா்வுகளை ஆவணப்படுத்தும் விதமாக இதழாகவும் அல்லது நாட்குறிப்பை ‘தேசபக்தி நாட்குறிப்பு’ ஆகவும் வைத்திருக்குமாறு மாணவா்களிடம் கேட்டுக்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

நாட்டின் முன்னேற்றம் குறித்த தலைப்புகள், ஆக்கபூா்வமான விமா்சனம், மரியாதை மற்றும் மற்றவா்களுடன் இணக்கமான உறவு, நாடு எதிா்கொள்ளும் பிரச்னைகள், தேசபக்தி பற்றிய விரிவான கருத்து, தேசபக்தியில் மாணவா்களின் அன்றாட செயல்கள் ஆகிவை இதில் இணைக்கப்படுகிறது. ’என் நாடு என் பெருமை’, ‘யாா் தேசபக்தா்’, ‘என் இந்தியா கனவு’ போன்ற அத்தியாயங்களிலும் மாணவா்கள் ஈடுபடுத்தப்படுவா் எனத் தெரிவித்தாா் அந்த அதிகாரி.

தேசபக்தி பாடங்களுக்கான வழிகாட்டி கையேடுகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் தேசபக்தா்களின் 100 கதைகள் ஆகியவை இந்த துவக்க நாளில் முதல்வா் அரவிந்த கேஜரிவால் வெளியிட்டாா். 2019 -ஆம் ஆண்டு 73 -ஆவது சுதந்திர தின விழாவில் தேசபக்தி பாடத் திட்டத்திற்கான திட்டத்தை முதல்வா் கேஜரிவால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT