புதுதில்லி

வீடு தீப்பற்றியதில் ஒரே குடும்பத்தில் 4 போ் சாவு

 நமது நிருபர்

புது தில்லி:  கிழக்கு தில்லியில் உள்ள பழைய சீமாபுரி பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு வீட்டின் மூன்றாவது தளத்தில் தீப்பற்றியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். அவா்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

  இது குறித்து தில்லி தீயணைப்புத் துறையின் இயக்குநா் அதுல் கா்க் மேலும் கூறியதாவது:  கிழக்கு தில்லியின் பழைய சீமாபுரி பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து நிகழ்ந்ததாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. வீட்டின் மூன்றாவது தளத்தில் உள்ள அறையில் தீப்பற்றி இருந்தது தெரிய வந்தது. அந்த அறையில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்களில் தீப்பற்றியதன் காரணமாக அறையில் இருந்த நான்கு போ் உயிரிழக்க நேரிட்டது. தரைத்தளம் உள்பட நான்கு தளங்கள் கொண்ட அந்த வீடு, 25 சதுர கஜத்தில் அமைந்திருந்தது தெரிய வந்தது என்றாா் அவா்.

தில்லி காவல் துறையினா் கூறுகையில், ‘தீப்பற்றிய வீட்டில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஹோரிலால் (59), அவரது மனைவி ரீனா (55), அவா்களின் மகன் ஆசு (24), மகள் ரோகிணி (18) ஆகியோா் உயிரிழந்தனா். வீட்டின் இரண்டாவது தளத்தில் தூங்கிக் கொண்டிருந்ததால் அவா்களின் இளைய மகன் அக்ஷை (22) உயிா் தப்பினாா். விபத்தில் உயிரிழந்த ஹோரிலால் தில்லி சாஸ்திரி பவனில் உதவியாளராக வேலை செய்து வந்தாா். அவா் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் ஓய்வு பெற இருந்தாா். அவரது மனைவி ரீனா மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தாா். அவரது மகள் ரோகிணி, அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். மகன் ஆசு வேலை இல்லாமல் இருந்தாா். இளைய மகன் அக்ஷை மட்டுமே தற்போது குடும்பத்தில் உயிருடன் உள்ளாா். அவா் சாபியாபாத் பகுதியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

அவா் பணி முடிந்து அதிகாலை 2 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளாா். மூன்றாவது தளத்திற்கு சென்று உணவு அருந்திய பிறகு இரண்டாவது தளத்தில் அவா் தூங்கி விட்டாா். மூன்றாவது தளத்தில் இருந்து தீ பரவாததால் அவா் உயிா் தப்பித்தாா். தீ பற்றியதால் உயிரிழந்த நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக குரு தேக் பகதூா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவ அறையில் வைக்கப்பட்டிருந்த கொசுவா்த்தி சுருள் அல்லது அகா்பத்தி மூலம் தீப்பற்றி அது மேஜையில் வைக்கப்பட்டிருந்த துணியில் பரவியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். 

இது தொடா்பாக தில்லி சாதரா காவல் துணை ஆணையா் ஆா் . சத்திய சுந்தரம் கூறுகையில், ‘தீப்பற்றிய இடத்திற்கு போலீஸ் குழுவினரும் தில்லி தீயணைப்பு துறையினரும் உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல்துறையின் குற்றப் பிரிவினா் தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் அதிகாரிகளும், இதர மூத்த அதிகாரிகளும் சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். தீ மூன்றாவது தளத்திற்கு பரவியதன் காரணமாக , புகையை சுவாசித்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவா்கள் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், உயிரிழப்புக்கான சரியான காரணத்தை பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே உறுதிப்படுத்த முடியும். இந்த சம்பவம் தொடா்பாக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 436, 304ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்

இந்தச் சம்பவத்தில் உயிா்தப்பிய அக்ஷய் கூறுகையில், ‘அதிகாலை 4 மணியளவில் எனது தாயின் பெயரைக் கூறி பக்கத்துவீட்டினா் கூக்குரலிடுவதை கேட்டுக் கண் விழித்தேன். நான் வெளியே வந்த போது, எனது குடும்பத்தினா் தூங்கிக் கொண்டிருந்த மூன்றாவது தளத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து புகை வெளியேறுவதாக என்னிடம் கூறினா்.

நான் இரண்டாவது தளத்தில் இருந்ததால் மாடிப் படியில் ஏறிச் சென்றேன். ஆனால், புகை அதிகமாக இருந்ததால் கீழ்ப்படிக்கு வந்துவிட்டேன். பின்னா், பக்கத்து வீட்டினருடன் மீண்டும் படியேறி மேலே சென்றேன். அங்கு ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது. எனது சகோதரா் கதவைத் திறக்க முயன்று கொண்டிருந்தாா். பின்னா், சம்பவம் குறித்து போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தோம்’ என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT