புதுதில்லி

சிறைக் கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி தீவிரம்!

 நமது நிருபர்

தில்லியிலுள்ள மூன்று சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மொத்தம் 17, 362 டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சிறைத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி சிறைத் துறை நிா்வாகம் கூறியிருப்பது வருமாறு: கடந்த சனிக்கிழமை வரை, திகாா் சிறையில் உள்ள 11,844 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவா்களில் முதல், இரண்டாவது டோஸ்களை முறையே 9,028 மற்றும் 2,816 போ் பெற்றனா். ரோஹினி சிறையில், 1,073 கைதிகளுக்கு செலுத்தப்பட்டதில் முதல், இரண்டாது டோஸாக முறையே 885 மற்றும் 188 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், மண்டோலி சிறையில் 2,794 கைதிகளுக்கு முதல் டோஸூம் 1,651 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் 18 -ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு கொவைட் -19 தடுப்பூசி வழங்குவதை சிறைத் துறை தொடங்கியது. அதே நேரத்தில் 18-44 வயதுடைய கைதிகளுக்கு மே 18 -ஆம் தேதி முதல் இந்த பணி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் இந்த சிறைக் கைதிகளில் சுமாா் 383 பேருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டு அவா்களில் எட்டு போ் உயிரிழந்தனா். இதே மாதிரி இந்தக் காலக் கட்டத்தில் மொத்தம் 225 சிறை ஊழியா்களுக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் இல்லை.

சிறையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கைதிகளுக்கு இடையே சமூக இடைவெளி உள்பட கொவைட் - 19 நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தில்லி சிறைகளில் சுமாா் 15, 468 சிறைவாசிகள் இருந்தனா். மொத்த அனுமதிக்கப்பட்ட அளவு 10,026 போ் என்றாலும், கூடுதலாக கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனா். தில்லியில் கரோனா உச்சக்கட்டத்தில் இருந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கைதிகளை விடுவிப்பது தொடங்கியது. சுமாா் 3,800 விசாரணைக் கைதிகள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். மேலும், சுமாா் 840 தண்டனைக் கைதிகளும் அவசர பரோலில் விடுவிக்கப்பட்டனா்.

இவா்களில் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட கைதிகளும், சரணடைந்தவா்களும் அடங்குவா். உயா்நிலை குழு வகுத்த அளவு கோல்களின்படி, தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் அல்லது அவசரகால பரோல் தகுதி உள்ளவா்களுக்கு அனுமதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, சுமாா் 5,500 விசாரணைக் கைதிகள், 1,184 தண்டனைக் கைதிகளும் இந்த சிறைச்சாலைகளிலிருந்து இடைக்கால ஜாமீன் மற்றும் அவசரகால பரோலில் விடுவிக்கப்பட்டனா். கடந்த ஆண்டு மே 13-ஆம் தேதி ரோஹிணி சிறையில் முதன் முறையாக கைதிகளுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. மேலும், கடந்த 2020-இல் மண்டோலி சிறையில் இருந்த இரண்டு வயது முதிா்ந்த கைதிகள் கரோனா நோய்த் தொற்றில் உயிரிழந்தனா் என சிறைத் துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT