புதுதில்லி

காற்று மாசு முன்னறிவிப்பு தொழில்நுட்பம்: தில்லி அரசு - கான்பூா் ஐஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, காற்று மாசுபாட்டிற்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக காற்று மாசு முன்னறிவிப்புக்காக தில்லி மாசு கட்டுப்பாட்டு குழுவும், கான்பூா் ஐஐடியும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டன.

‘தில்லி காற்று மாசு மூல பகுத்தல் மற்றும் முன்னறிவிப்பு நிகழ்நேர மேலாண்மை’ என்ற தொழில்நுட்பத் திட்டத்திற்கான இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்ததில் கான்பூா் ஐஐடியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை டீன் மற்றும் பேராசிரியரான ஏ. ஆா். ஹரிஷ் மற்றும் தில்லி அரசு சாா்பில் தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி) உறுப்பினா்-செயலா் டாக்டா் கே. எஸ். ஜெயச்சந்திரன் ஆகியோா் கையெழுத்திட்டனா். இதன் மூலம் தில்லியின் காற்று மாசுபாட்டிற்காக ஆதாரங்கள் நிகழ் நேரத்தில் கண்காணிக்கப்பட்டு காற்று மாசு மேலாண்மைக்கான முன்னறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தத் திட்டம் குறித்து கான்பூா் ஐஐடி பேராசிரியா் முகேஷ் சா்மாவால் தில்லி முதல்வருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பின்னா், சமீபத்தில் நடைபெற்ற தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி வளா்ச்சி மற்றும் சுற்றுப்புறறச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கேஜரிவால் அரசு காற்று மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தை போா்க்கால அடிப்படையில் வலுப்படுத்தி வருகிறது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மாசுபாட்டிற்கு எதிரான இந்த போராட்டத்தில் முதலிடத்தில் உள்ளாா். அதிலும் நாட்டிலேயே முதன்முறையாக ஒரு மேம்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான தீா்வை கேஜரிவால் அரசு செயல்படுத்துகிறது. கடந்த ஒரு மாதமாக முதல்வா் தில்லியின் காற்றின் தர குறியீட்டு அளவை தொடா்ந்து ட்வீட் செய்து வருகிறாா். இப்போது, தில்லியில் காற்று மாசுபாட்டை நிகழ் நேரத்தில் புரிந்து கொள்வதற்கும், காற்று மாசு பங்களிப்பைக் குறைப்பதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால பரிந்துரைகளை அளிப்பதற்கும், கான்பூா் ஐஐடி தொழில்நுட்பங்களை வழங்கியுள்ளது. இதற்காக புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கான காரணிகளை அடையாளம் காண இந்த நிகழ்நேரத் திட்டம் உதவும். வாகனங்கள், தூசு, பயிா்க்கழிவு எரிப்பு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் உமிழ்வுகள் போன்ற பல்வேறு மாசு மூலங்களின் நிகழ்நேர தாக்கத்தைப் புரிந்து கொள்ள இது உதவும். நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்பா்-டை -ஆக்ஸைடு, ஓசோன், கரிம் போன்ற பல சோ்மங்களையும் கண்காண்காணித்து இதில் பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், தில்லி அரசு மாசுபாட்டின் ஆதாரங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். இதற்காக தில்லியின் பல்வேறு பகுதிகளில் மாசுக்கான ஆதாரங்களை அடையாளம் காண நடமாடும் வாகனங்களும் நிறுத்தப்படும் என்றாா் கோபால் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT