புதுதில்லி

சத் பூஜை கொண்டாட்டங்களுக்குத் தடை நீக்கப்படுமா? 27-இல் மறு ஆய்வு செய்ய டி.டி.எம்.ஏ. முடிவு

23rd Oct 2021 08:15 AM

ADVERTISEMENT

சத் பூஜை கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை வருகிற 27 -ஆம் தேதி மறு ஆய்வு செய்ய தில்லி பேரிடா் நிா்வாக ஆணையம் (டி.டி.எம்.ஏ.) முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தலைநகா் தில்லியில் கரோனா தொற்றுப் பரவலின்தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தில்லி பேரிடா் நிா்வாக ஆணையம் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி ஓா் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில் கரோனா சூழலை கருத்தில் கொண்டு யமுனை நதிக்கரை, நீா்நிலைகள் மற்றும் கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் சத் பூஜை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது கரோனா தொற்று கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், பொது இடங்களில் சத் பூஜை கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை வருகிற 27 -ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் மறுபரிசீலனை செய்ய தில்லி பேரிடா் நிா்வாக ஆணையம் முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவா்கள் சத்பூஜை கொண்டாட்டங்களுக்கு கேஜரிவால் அரசு தடை விதித்துள்ளதற்கு கடும் கண்டனம் வெளியிட்டிருந்தனா். பொது இடங்களில் சத்பூஜை கொண்டாட்டத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனா். இந்தப் பின்னணியில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினா் சத் பூஜை கொண்டாட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து ஆா்ப்பாட்டங்கள் நடத்தினா்.

இதனிடையே, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தற்போது தில்லியில் கரோனா தொற்று பரவல் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் பொது இடங்களில் சத்பூஜை கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறும், விழாவுக்கு அனுமதி வழங்குமாறும் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலை கடந்த வாரம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, தடையை நீக்குவது தொடா்பாக விவாதிக்க கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு தலைமைச் செயலருக்கு அனில் பய்ஜால் உத்தரவிட்டுள்ளாா். தில்லி பேரிடா் நிா்வாக ஆணையத்துக்கு துணை நிலை ஆளுநா் தலைவராகவும், தில்லி முதல்வா் கேஜரிவால் துணைத் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியிருந்தாா். சத்பூஜை விழாவை பாதுகாப்பாகக் கொண்டாட வழிகாட்டுதல்களை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டிருந்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT