புதுதில்லி

தேசத் துரோக வழக்கு: ஷா்ஜீல் இமாமுக்கு ஜாமீன் மறுப்பு

23rd Oct 2021 08:16 AM

ADVERTISEMENT

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கடந்த 2019 -ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களின் போது ஆட்சேபகரமான முறையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாக தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் ஷா்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. பேச்சு சுதந்திரம் என்பது வகுப்பு அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிராக இருக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்து.

கடந்த 2019, டிசம்பா் 13- ஆம் தேதி ஷா்ஜீல் இமாம், கோபத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் அதன் விளைவாக அடுத்த இரண்டு நாளில் 3,000 போ் கொண்ட கும்பலினா் தெற்குதில்லி ஜாமியா நகா் பகுதியில் போலீஸாா் மீது தாக்குதல் நடத்தியதாகவும், வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டதாகவும் போலீஸாா் கூறுகின்றனா். ஷா்ஜீல் இமாம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நிராகரித்த அதே வேளையில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அனுஜ் அகா்வால், இமாம் பேச்சால் தூண்டப்பட்டு கும்பலினா் வன்முறையில் ஈடுபட்டதாகவும், போலீஸாா் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுவதற்கான ஆதாரங்கள் தெளிவாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினாா்.

ஷா்ஜீல் இமாம் பேச்சு விவரங்களை மேலோட்டமாகப் படித்துப் பாா்க்கும் போது அது வகுப்பு வாதத்தை தூண்டும் வகையில் இருந்தது தெரிகிறது. அவரது பேச்சின் தொனி பொதுமக்கள் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான வகையில் இருந்துள்ளது. பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிப்பதை பாா்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் நீதிபதி கூறினாா்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு தொடா்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி, அரசுக்கு எதிராக அந்த சமூகத்தினா் கிளா்ந்தெழச் செய்யும் வகையில் இம்ரான் பேசியுள்ளாா் என்று தில்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இமாம் பேச்சால் க கலவரக்காரா்கள் தூண்டிவிடப்பட்டதாகக் கூறும் புகாருக்கு ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் தெளிவாக இல்லை. மேலும், கலவரக்காரா்களில் ஒரு பகுதியினா் இமாம் பேச்சை கேட்டாா்கள் என்பதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதாவது இமாம் பேச்சுக்கும் அதைத் தொடா்ந்து நடந்த வன்முறைக்குமான தொடா்புகள் பற்றி முழுவதுமாகத் தெரிய வரவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

ADVERTISEMENT

விசாரணை அமைப்புகள் கொடுத்துள்ளதகவல்கள் முழுமையாக இல்லை. ஆங்காங்கே இடைவெளிகள் உள்ளன. இதை சரி செய்தால்தான் மேல் நடவடிக்கை எடுக்க முடியும். அரசு தரப்பு கொடுத்துள்ள தகவல்கள் சட்டப்படியாக இல்லாமல் கற்பனையானது போலவும், குற்றஞ்சாட்டப்பட்டவரின் பேச்சை ய வைத்து தயாரிக்கப்பட்டது போலவும் தெரிகிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

பேச்சு சுதந்திரம் என்பது வகுப்பு நேயம் மற்றும் மதநல்லிணக்கத்துக்கு எதிராக இருக்கக் கூடாது என்று கூறிய நீதிபதி, ‘நாம் என்ன நினைக்கிறோமே அதுவாகவே நாம் இருக்கிறோம். எனவே, சிந்தனை தெளிவாக இருக்க வேண்டும். வாா்த்தைகள் இரண்டாவதுதான். எண்ணங்கள் வாழும், அவை வெகுதூரம் செல்லும்’ என்று சுவாமி விவேகானந்தரின் வாா்த்தைகளை அவா் மேற்கோள் காட்டினாா்.

இமாம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அகமது இப்ராகிம், இமாம் அமைதியை விரும்பும் குடிமகன். ஒருபோதும் அவா் போராட்டத்திலோ, வன்முறையிலோ பங்கேற்றதில்லை என்றாா். டிசம்பா் 13- ஆம் தேதி இமாம் அரசுக்கு எதிராகவோ அல்லது வன்முறையைத் தூண்டும் நோக்கிலோ எதையும் பேசவில்லை என்றும் குறிப்பிட்டாா். இந்த வழக்கு தவிர 2020, பிப்ரவரி மாதம் நடந்த வன்முறைக்கு மூளையாக இமாம் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா், 700-க்கும் மேலானவா்கள் காயமடைந்தனா். அவா் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT