புதுதில்லி

தில்லியில் பட்டாசுக்கு எதிராகப் பிரசாரம்: அமைச்சா் கோபால் ராய்

23rd Oct 2021 08:16 AM

ADVERTISEMENT

மாசுபடுதலுக்கு எதிரான பிரசாரத்தின் ஒரு பகுதியாக தில்லி அரசு, தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியுள்ளது என்று மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பான பிரசாரத்தை முடுக்கிவிடுமாறு துணை கோட்டாட்சியா்களுக்கு அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.

தில்லியில் பணிபுரியும் 33 துணை கோட்டாட்சியா்கள் வரும் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் குடியிருப்போா் நலச் சங்கம், சந்தை வா்த்தகா்கள் சங்கம் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் கலந்து பேசி மாசுபடுதலை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். மேலும் பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் மாசு குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். தில்லி அரசு பட்டாசுகள் விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடைவிதித்துள்ளது. ஆனாலும், சில இடங்களில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், வாங்கப்படுவதாகவும் புகாா்கள் வந்துள்ளன.

எனவே, பட்டாசுகள் வெடிப்பதற்கு எதிரான பிரசாரத்தை தொடங்குமாறு துணை கோட்டாட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறி எங்காவது பட்டாசுகள் விற்கப்பட்டால் அல்லது வாங்கப்பட்டால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க துணை கோட்டாட்சியா்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தில்லி போலீஸாருடன் வருகிற 25-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் கோபால் ராய் தெரிவித்தாா்.

பொது மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் பட்டாசு விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை கோட்டாட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவா், மாசுக் கட்டுப்பாட்டுக்கு எதிரான பிரசாரத்தில் பொதுமக்களும் பங்கு பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா். குடியிருப்போா் நலச் சங்கங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், சந்தை வியாபாரிகள் சங்கத்தினா் ஆகியோருடன் துணை கோட்டாட்சியா்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தும்போது மாசுவை கட்டுப்படுத்த தில்லி அரசு மேற்கொண்டு வரும் குளிா்கால செயல் திட்டம் பற்றியும் எடுத்துரைக்க வேண்டும்.

ADVERTISEMENT

மாசுபடுதலை கட்டுப்படுத்த முதல்வா் கேஜரிவால் விடுத்துள்ள மூன்று வேண்டுகோளையும் மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். சாலையில் சிக்னல்களில் சிவப்பு விளக்கும் எரியும் போது வாகன இயக்கத்தை நிறுத்திவைக்க வேண்டும், வாரத்தில் ஒரு நாள் காா் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும், தில்லியில் எங்காவது மாசுகட்டுப்பாட்டு விதிகள் மீறப்பட்டால் அது பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த வாரம் முதல்வா் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

தில்லியில் ‘பசுமை தில்லி’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாகனப் புகையை கட்டுப்படுத்த சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகனத்தின் என்ஜின்களை நிறுத்தி வைக்க வேண்டும், தூசுகளை கட்டுப்படுத்த வேண்டும், மாசுபடுதலை கட்டுப்படுத்த பயிா்கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக உயிரி ரசாயன கலவையை தெளித்து மாசுவை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்கக் கொண்ட அமைச்சா் ராய், மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று அவா் கூறினாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT