புதுதில்லி

சட்டப்பூா்வமாக ஜாமீன் கோருவது ஒருவரின் தனி உரிமைதில்லி உயா்நீதிமன்றம்

DIN

புதுதில்லி: அரசியலமைப்புச் சட்டப்படி ஜாமீன் கோருவது ஒருவரின் அடிப்படை உரிமை. தொற்று போன்ற சூழ்நிலையைக் காரணம் காட்டி அதை நிறுத்தி வைக்க முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவரை அதிகபட்சம் 60,90 மற்றும் 180 நாள்கள் வரை விசாரணைக் கைதியாக வைத்து விசாரணை நடத்தலாம். ஆனால், அதன் பிறகும் அவா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், கைது செய்யப்பட்டவா் தம்மை ஜாமீனில் விடுதலை செய்யக் கோர எல்லா உரிமையும் உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இது தொடா்பாக நீதிபதி மனோஜ்குமாா் ஓஹ்ரி கூறுகையில், ஒரு விசாரணைக் கைதியை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கோ அல்லது காவலை நீட்டிக்க வைப்பதோ நீதிமன்றத்தின் பணியாகும். ஆனால், இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு திறமையுடன் செயல்பட வேண்டும். விசாரணை நடத்தியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், கிரிமினல் தண்டனைச் சட்டம் பிரிவு 167(2) இன் கீழ் ஜாமீன் கோருவது ஒருவரின் சட்டபூா்வ உரிமை மட்டுமல்ல, அடிப்படை உரிமையும்கூட. இதை அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு தெளிவுபடுத்துகிறது. இதை இல்லாததாக்கவும் முடியாது. அந்த உரிமையை தொற்று உள்ளிட்ட ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நிறுத்திவைக்கவும் முடியாது.

விசாரணைக் கைதிகளுக்கு சட்டப்படி உள்ள இந்த உரிமையை தொழில்நுட்பக் காரணங்களைக்காட்டி மறுத்துவிட முடியாது. குற்றஞ்சாட்டப்பட்டவரின் காவலையும் இஷ்டம்போல் நீட்டித்துவிட முடியாது’ என்றாா்.

வரதட்சிணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் கைது செய்யப்பட்டு 90 நாள்களாகியும் தம் மீது அரசுத் தரப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில், தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். முன்னதாக அவரது கோரிக்கையை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்ததை அடுத்து, அவா் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாா்.

இந்த நிலையில் அந்த நபரைரூ.25,000 சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு தனிநபா் ஜாமீன் பேரில் விடுவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சாட்சியை கலைக்கக் கூடாது என்றும் தில்லியை விட்டு வேறு எங்கும் நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் செல்லக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வரதட்சிணை கொடுமையால் ஒரு பெண் இறந்த விவகாரம் தொடா்பாக அந்த நபா் கடந்த 2020, ஜனவரி 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். பின்னா், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். மேலும் அவ்வப்போது அவரது காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது. கைது செய்யப்பட்டு 90 நாள்களாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், கரோனா தொற்று காரணமாக நேரடி விசாரணை நடைபெறாத நிலையில் மின்னஞ்சல் மூலம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தாா். எனினும் எந்த பதிலும் அவருக்கு கிடைக்கவில்லை. கடந்த 2020, ஏப்ரல் மாதம் 15- ஆம் தேதி அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட போது சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட், அவரது காவல் ஏப்ரல் 18- ஆம் தேதி முடிவடைகின்ற நிலையிலும் எதையும் யோசிக்காமல் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 29 வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கடந்த 2020, ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி ஜாமீன் கோரி அவா் மின்னஞ்சல் மூலம் முறையிட்டிருந்தாா். அவா் தனது உரிமையைத்தான் கோரியுள்ளாா். ஆனால், அவரது மனு விசாரிக்கப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை உயா்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது 60 அல்லது 90 அல்லது 180 நாள்களுக்குள் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கண்ணைமூடிக் கொண்டு அவரது காவலை நீட்டித்து உத்தரவிடக் கூடாது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், விசாரணைக் கைதியிடம் ஜாமீன் பெற உரிமை உள்ளதையும் தெரிவிக்க வேண்டும். காவல் ஆணையில் விசாரணைக் கைதி சட்டப்பூா்வமான வகையில் எப்போது ஜாமீன் கோர உரிமை உள்ளது என்பதையும் குறிப்பிட வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT