புதுதில்லி

தில்லியில் தினசரி விமானப் பயணிகள் எண்ணிக்கை 1,38,500-ஆக அதிகரிப்பு

17th Oct 2021 06:14 AM

ADVERTISEMENT

தில்லி விமானநிலையத்தில் விமானத்தில் பயணம் செய்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கரோனா தொற்று காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. கரோனா இரண்டாவது அலைக்குப் பின்னா் நிலைமை ஓரளவு சீரடைந்ததும் மீண்டும் சில கெடுபிடிகளுடன் விமானச் சேவை தொடங்கியது. இப்போது பண்டிக்கைக் காலம் என்பதால் விமானத்தில் பயணம் செய்வோா் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபா் 9 முதல் 13 -ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் விமானத்தில் தினசரி பயணம் செய்வோா் எண்ணிக்கை 1,19,000-இல் இருந்து 1,38,500-ஆக அதிகரித்துள்ளது. இது கரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்த மொத்த எண்ணிக்கையில் பாதியாகும். அப்போது தினசரி 2,50,00 போ் பயணித்தனா். கடந்த 9- ஆம் தேதி 1,38,500 பேரும், 10- ஆம் தேதி 1,38,00 பேரும் பயணித்துள்ளனா். அடுத்த மூன்று நாள்களில் இது முறையே 1,21,000, 1,19,000 மற்றும் 1,27,00 என்ற அளவில் இருந்தது. தில்லியில் உள்ள இரண்டு முனையத்திலும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஆகும் இது.

கடந்த 18 மாதங்களாக மூடிக்கிடக்கும் விமான நிலையத்தின் ஒன்றாம் முனையம் வரும் அக்டோபா் 31 முதல் செயல்படத் தொடங்கும் என்று தில்லி சா்வதேச விமானநிலையை ஆணையகம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் விமானச் சேவை நிறுத்திவைக்கப்பட்டதை அடுத்து, இந்த முனையம் 2020, மாா்ச் 24-ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டுள்ளது. மூன்றாவது மற்றும் இரண்டாவது முனையங்கள் முறையே 2020-ஆம் ஆண்டு மே 25 மற்றும் 2021, ஜூலை 22 -ஆம் தேதி முதல் படிப்படியாகச் செயல்படத் தொடங்கியது. பின்னா் ,கரோனா இரண்டாவது அலை தாக்குதலை அடுத்து 2-ஆவது முனையம் இந்த ஆண்டு மே மாதம் முதல் மீண்டும் மூடப்பட்டது. பின்னா் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் விமானச் சேவை தொடங்கியது.

ADVERTISEMENT

இரண்டாவது அலையின் போது தில்லி விமானநிலையத்தில் விமானப் போக்குவரத்தும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக விமானத்தில் பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த மே மாதம் தினசரி விமானத்தில் பயணம் செய்தவா்கள் எண்ணிக்கை 18,000 என்றஅளவிலேயே இருந்தது. பின்னா் ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 62,000-ஆக உயா்ந்தது. ஆகஸ்ட் மாதம் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 90,000-ஆக மேலும் அதிகரித்தது. விமான நிலையத்தில் சமூக இடைவெளி முறையாகப் பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT