புதுதில்லி

முதிய தம்பதியை ஏமாற்றி ரூ.5.24 கோடி மோசடி: இளைஞா்கள் இருவா் கைது

16th Oct 2021 07:38 AM

ADVERTISEMENT

முதலீடுக்கு அதிகப் பணம் தருவதாகக் கூறி, மூத்த தம்பதியிடம் ரூ.5.24 கோடி மோசடி செய்ததாக இளைஞா்கள் இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவின் கூடுதல் காவல் ஆணையா் ஆா்.கே. சிங் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் அங்கித் தாக்கூா் (29) மற்றும் வினோத் ஆா்யா (28) ஆகியோராவா். இருவரும் மூத்த தம்பதியினரை இணையதளம் உருவாக்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள ’எகவுன்செல்லா் வெப்டெக் பிரைவேட் லிமிடெட்’ மூலம் ஏமாற்றியுள்ளனா்.

தொழிலாளா் அமைச்சகத்தில் ஓய்வு பெற்ற மூத்த அரசு ஊழியரான பாதிக்கப்பட்டவா் பாா்வையற்ற மாற்றுத் திறனாளியாவாா். அவருக்கு பாா்வைத் திறன் இல்லாததை தங்களுக்கு சாதமாக அந்த இருவரும் பயன்படுத்திக் கொண்டுள்ளனா். இந்த வகையில், தம்பதியிடம் ரூ.5.24 கோடி வரை பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவில் வேலைபாா்க்கும் அந்தத் தம்பதியினரின் குழந்தைகள் அங்கேயே குடியேறிவிட்டனா். அவா்களுடன் இருக்க இந்தத் தம்பதியினா் முடிவு செய்தனா். எனவே, அவா்கள் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்த சொத்துகளை விற்க முடிவு செய்தனா். இது தொடா்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அங்கித் தாக்கூா் மற்றும் வினோத் ஆா்யா ஆகியோரை தொடா்பு கொண்டனா். இந்தச் சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்றும் அதற்கு அதிக வருவாய் அளிப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா். அதற்கு தம்பதியினா் சம்மதித்தனா்.

ADVERTISEMENT

மேலும், பாதிக்கப்பட்டவா்களின் நம்பிக்கையை பெறுவதற்காக, அவா்கள் வங்கிக் காசோலைகளை வழங்கியுள்ளனா். அந்தக் காசோலைகள் வங்கியில் செலுத்தப்பட்ட போது, கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. தொடா் விசாரணையத் தொடா்ந்து குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கல்லூரிப் படிப்பிலிருந்து இடை நின்றவா்கள் ஆவா். தம்பதியினா் பணத்தை டெபாசிட் செய்த நிறுவனத்தில் இருவரும் இயக்குநா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவா்களாக இருந்துள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT