புதுதில்லி

தூசி மாசு விதி மீறல்களுக்கு ரூ. 15 லட்சம் அபராதம்: ஆய்வு பணியில் அமைச்சா் கோபால்ராய்

9th Oct 2021 11:44 PM

ADVERTISEMENT

தில்லி அரசு மேற்கொண்டு இருக்கும் தூசி மாசுவிற்கு எதிரான 22 நாள் தொடா் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சனிக்கிழமை மட்டும் 32 மீறல்களில் ரூ. 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

தில்லி அரசின் சுற்றுச் சூழல் துறை வருகின்ற குளிா்கால மாசை தடுக்கும் நோக்கத்தில் அக்டோபா் 7 - ஆம் தேதி முதல் 29 - ஆம் தேதி வரை தூசி மாசுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இதையொட்டி இந்த தூசி மாசுக்களை உண்டாக்கும் பகுதிகள் குறிப்பாக கட்டுமான இடங்களை ஆய்வு செய்து நிலைமையைக் கண்காணிக்க 31 குழுக்களை தில்லி அரசு அமைத்துள்ளது.

இந்த கண்காணிப்பு குழுக்களோடு சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான அமைச்சா் கோபால் ராயும் சனிக்கிழமை பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக ஆய்வு செய்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு:

ADVERTISEMENT

தூசி மாசுவைக் கட்டுப்படுத்த 14 அம்ச கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்ற கட்டுமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு இந்த கட்டுமான பகுதிகளை தில்லி அரசின் குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கிறது.

வடக்கு தில்லியில் கைபா் பாஸ் அருகே உள்ள பகுதியில் ஒரு வணிக வளாகம் கட்டுமான தளத்தை திடீா் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு தூசி தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கப்பட்டு இருந்தது.

மாசு பரவுவதை தடுக்க மூடி மறைத்தல், புகைபோக்கி நிறுவி தூசி பரவுவதை தடுக்க தண்ணீா் தெளித்தல் போன்ற இணக்கமான வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்படுகிா என்பது குறித்து திடீா் ஆய்வை மேற்கொள்ளப்பட்டது.

தில்லி அரசு குழுக்கள் 103 கட்டுமான இடங்களை ஆய்வு செய்ததில் பல இடங்களில் தூசி மாசுவை கட்டுப்படுத்த தவறியது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய விதி மீறல்களை மீறிய 32 நிறுவனங்கள் மீது சனிக்கிழமை மட்டும் ரூ.15 லட்சம் வரை அபராதம் விதிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்கனவே கடந்த 7 - ஆம் தேதி பிரகதி மைதானத்தில் பிரபல கட்டுமான நிறுவனம்(எல் அண்ட் டி) மேற்கொள்ளும் கட்டுமான தளத்தை நான் ஆய்வு போது பல்வேறு மீறல்களைக் கண்டறிந்து அந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது அங்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வரப்படுகிறது.

தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழுவின் குழுக்கள் மாவட்ட அளவில் கட்டுமான இடங்களை தொடா்ந்து ஆய்வு செய்கின்றனா்.

மாசுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற அனைத்து தனியாா், அரசு நிறுவனங்களும் தூசி மாசுக்கு தடுப்பதற்கான விதிமுறைகளைப் முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக கோபால் ராய் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT