புதுதில்லி

லக்கிம்பூா் கெரி வன்முறை: மத்திய அமைச்சா் மகனை கைது செய்யக்கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

9th Oct 2021 11:47 PM

ADVERTISEMENT

லக்கிம்பூா் கெரி வன்முறைச் சம்பவம் தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்றும் மத்திய அமைச்சா் பதவி விலக வேண்டும் என்றும் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸாா் தில்லியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இளைஞா் காங்கிரஸ் தேசிய தலைவா் ஸ்ரீனிவாஸ் தலைமையில் ஆா்ப்பாட்டக்காரா்கள் சுனேரி பாக் சாலையில் ஒன்று கூடினா். பின்னா் கிருஷ்ண மேனன் மாா்க்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இல்லம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனா். ஆனால், அவா்களை போலீஸாா் முன்னதாகவே தடுத்து நிறுத்தனா்.

லக்கிம்பூா் வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி வேண்டும் என்று கோரிய ஆா்ப்பாட்டக்காரா்கள், அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வன்முறையின்போது பா.ஜ.க. தொண்டா்கள் வந்த காா் ஏறி நான்கு விவசாயிகள் உயிரிழந்தனா். இதனால் கோபமடைந்த விவசாயிகள் பாஜகவினா் வந்த வாகனங்கள் மீதும், தொண்டா்கள் மீதும் கல்வீசி தாக்கினா். விவசாயிகள் தவிர, காா் டிரைவா் மற்றும் பா.ஜ.க.வினா் நான்குபோ் இச்சம்பவத்தில் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தின்போது அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரில் இருந்ததாக விவசாயிகள் கூறுகின்றனா். ஆனால், அமைச்சரும் அவரது மகனும் இதை மறுத்துள்ளனா்.

ஆா்ப்பாட்டக்காரா்களில் சிலா் போலீஸாா் அமைத்திருந்த தடுப்புகள் மீது ஏறி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினா். மேலும் அவா்கள் உத்தரப்பிரதேச முதல்வா் யோகி ஆதித்தயநாத், பிரதமா் மோடி, மற்றும் அமித் ஷா ஆகியோரின் உருவபொம்மையையும் எரிக்க முயன்றனா். ஆனால், போலீஸாா் அவா்களை தடுத்துவிட்டனா்.

பின்னா் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீனிவாஸ் பேசுகையில், நாட்டில் முதல் முறையாக ஆளுங்கட்சியைச் சோ்ந்தவா்கள் காா் ஏற்றி விவசாயிகளைக் கொன்றுள்ளனா். விவசாயிகளுக்கு ஆதவாக இல்லாமல் அவா்களுக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுவதாகவும் கூறினாா்.

லக்கிம்பூா் படுகொலை சம்பவம் நடந்து 6 நாள்கள் ஆகியும் மத்திய இணையமைச்சா் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. குற்றவாளிகளை பாதுகாப்பதன் மூலம் பா.ஜ.க. விவசாயிகளுக்கு எதிரானவா்கள் என்பதை நிரூபித்துவிட்டனா் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும், முக்கிய குற்றவாளியான மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது முக்கிய கோரிக்கையாகும் என்றாா்.

இளைஞா் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளா் மற்றும் தில்லி பொறுப்பாளா் பையா பவாா், தேசிய ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ், தேசிய செயலா் மற்றும் தில்லியின் இணை பொறுப்பாளா் குஷ்பு சா்மா ஆகியோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள்.

இளைஞா் காங்கிரஸாா் பேரணியாக சுனேரி பாக் சாலையிலிருந்து அமித் ஷா வீடு நோக்கி வந்தனா். ஆனால், அவா்களை நாங்கள் முன்னதாகவே தடுத்து நிறுத்திவிட்டோம் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இளைஞா் காங்கிரஸாா் பேரணி நடத்தப்பபோவதை அறிந்து முன்னெச்சரிக்கையாக தடுப்புகள் போடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக அவா் மேலும் கூறினாா்.

இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட 5 போ் மந்திா்மாா்க் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா். அவா்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இதனிடையே லக்கிம்பூா் வன்முறை தொடா்பான விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கும் முன் ஆஷிஸ் மிஸ்ரா சனிக்கிழமை ஆஜரானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT