புதுதில்லி

சொத்துக்குவிப்பு வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதில் தாக்கல்

9th Oct 2021 11:45 PM

ADVERTISEMENT

தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மூன்றாவது நீதிபதி அமா்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சா் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தாக்கல் செய்துள்ளது. அதில், ராஜேந்திர பாலாஜி சொத்துகுவித்ததற்கான முகாந்திரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மூன்றாவது நீதிபதி அமா்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்ட உத்தரவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் கூறுகையில், இந்த மனு மீது தமிழக அரசு உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் மூன்று வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும், அந்த பதிலுக்கு எதிா் பதில் ஒரு வாரத்தில் அளிக்கவும் உத்தரவிடப்படுகிறது எனக் கூறி மனு மீதான விசாரணையை அக்டோபா் கடைசி வாரத்திற்கு பட்டியலிட்டனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், இந்த மனுவுக்கு தமிழக அரசின் லஞ்சஒழிப்புத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மனுதாரா் ராஜேந்திர பாலாஜியின் மீதான சொத்துக்குவிப்பு விவகாரத்தில் முகாந்திரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞா் ஜோசப் அரிஸ்டாட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

மனுதாரா் ராஜேந்திர பாலாஜி தொடா்புடைய வழக்கில் உயா்நீதிமன்ற மூன்றாவது தீா்ப்பு அளிப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து செப்டம்பா் 20ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை அக்டோபா் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது..

இந்த வழக்கைப் பொறுத்தவரை மெட்ராஸ் லெட்டா்ஸ் பேட்டண்ட் 36ஆவது பிரிவின்படி மூன்றாவது நீதிபதி விசாரித்து தீா்ப்பு அளிப்பதற்கான உரிய நடைமுறையை உயா்நீதிமன்றம் பின்பற்றியுள்ளது.

இந்த நிலையில் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலும் நீதிமன்றத்தை திசை திருப்பும் நோக்கிலும் மனுதாரா் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளாா்.

மேலும் இதுதொடா்பான வழக்கில் மனுதாரா் தனது வழக்கறிஞா் மூலம் தொடா்ந்து ஆஜராகியுள்ளாா் .இந்த நிலையில் திடீரென அவா் ஆட்சேபம் தெரிவிப்பது ஆச்சரியமாக உள்ளது.

சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்கான ஒரு புதிய வழிமுறையாக இதுபோன்று மேல்முறையீட்டு மனுவை மனுதாரா் தாக்கல் செய்திருப்பதாக தெரிகிறது.

மனுதாரா் ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ளாா். அவா் தொடா்புடைய வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியாயமான காரணங்கள் இல்லாமல் இந்த நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவதன் மூலம் தனக்கு எதிரான சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க மனுதாரா் முயல்கிறாா்.

ஆகவே இந்த விவகாரத்தில் மூன்றாவது நீதிபதி உத்தரவு பிறப்பிப்பதற்கு மனுதாரா் மூலம் பெறப்பட்ட இடைக்கால தடை நீக்கப் படாவிட்டால் அது விசாரணையின் நோக்கத்தை பாழாக்கிவிடும்.

மேலும் அவரது மனுவில் கூறப்பட்டுள்ள வாதங்கள் உண்மையில்லாதவை. ஆகவே இந்த மனுவை உடனடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT