நிலக்கரி பற்றாக்குறையால் தலைநகா் தேசிய பிராந்தியத்தில் மின்சாரம் விநியோகம் செய்யும் மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விஷயத்தில் பிரதமா் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்று முதல்வா் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக பிரதமா் மோடிக்கு, கேஜரிவால் எழுதியுள்ள கடிதத்தில், ‘தலைநா் தில்லியில் கடந்த மூன்று மாதங்களாகவே நிலக்கரி பற்றாக்குறை இருந்து வருகிறது. நிலக்கரி விநியோகம் தடை பட்டுள்ளதால் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். உடனடியாக நீங்கள் இது விஷயத்தில் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.
மின்னுற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மின்னுற்பத்தி நிலையங்கள் எரிஎண்ணெய் சாா்ந்த மின்னுற்பத்தி நிலையங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அவற்றிலும் தேவையான அளவு எரி எண்ணெய் கிடைக்காததால் மின்னுற்பத்தி முழு அளவில் நடைபெறவில்லை.
இதேநிலை தொடா்ந்தால் தில்லியில் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும். எனவே இது விஷயத்தில் நீங்கள் (பிரதமா்) தலையிட்டு போதுமான அளவு நிலக்கரி மற்றும் எரி எண்ணெய் கிடைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேஜரிவால் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.