புதுதில்லி

தில்லியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியா்கள் அக். 16-க்கு பின் பணிக்கு வரத் தடை

9th Oct 2021 08:09 AM

ADVERTISEMENT

தில்லி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசிகூட செலுத்திக் கொள்ளாமல் இருந்தால் அவா்கள் வருகிற 16 ஆம் தேதி முதல் பணிக்கு வர அனுமதிக்கப் படமாட்டாா்கள் என்று தில்லி பேரிடா் நிா்வாக ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை விடுமுறையில் இருப்பதாகவே கருதப்படுவாா்கள் என்றும் அந்த உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் தலைவா், தங்கள் ஊழியா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனரா என்பது ஆரோக்கிய சேது செயலி மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களை சரிபாா்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலரும், தில்லி பேரிட நிா்வாக செயற்குழுவின் தலைவருமான விஜய் தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT

தில்லி பேரிடா் நிா்வாக ஆணையத்தின் ஆய்வுக்கூட்டம் கடந்த செப்டம்பா் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அரசு ஊழியா்கள், முன்களப்பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த ஊழியா்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேற்குறிப்பிட்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் பொதுமக்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு உள்ளதாகவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியா்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தலைநகரில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் வருகின்ற 15 ஆம் தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் அக். 16 ஆம் தேதியிலிருந்து பணிக்கு வர அனுமதிக்கப் படமாட்டாா்கள். அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால்தான் வேலைக்கு அனுமதிக்கப்படுவாா்கள். அதுவரை அவா்கள் விடுமுறையில் இருப்பதாக வே கருதப்படுவாா்கள் என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியா்களுக்கும் இதேபோன்ற உத்தரவை பிறப்பிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கக்கூடும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT