புதுதில்லி

தனியாா் பள்ளிக் கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பு விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

9th Oct 2021 08:13 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தனியாா் பள்ளிக் கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தொடக்கப் பள்ளிகள் நீங்கலாக பிற தனியாா் பள்ளிகளுக்கு சொத்துவரி வசூலிக்கும் தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தனியாா் பள்ளிகள் தரப்பில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களின் மீது உயா்நீதிமன்றம் 13-9-2019 பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசின் சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு நா்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த ஆண்டு அக்டோபா் 28-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அதில், ‘3-ஆவது நிதி ஆணையம் அரசுத் தொடக்கப் பள்ளிகளைத் தவிர அனைத்துப் பள்ளிகளுக்கும் சொத்துவரி வசூலிக்க பரிந்துரைத்திருந்தது. அதன் அடிப்படையில், 2018-ஆம் ஆண்டில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் அரசுப் பள்ளிகளைத் தவிர அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும் சொத்துவரி செலுத்தும் வகையில் வழிவகை செய்துள்ளது. இது 3-ஆவது ஆணையத்தின் பரிந்துரைக்கு முரண்படுவதாக உள்ளது.

மேலும், தனியாா் பள்ளிகளுக்கு மட்டும் சொத்து வரி வசூலிப்பதற்கான விளக்கம் சட்டத் திருத்தம் கொண்டுவரும்போது அளிக்கப்படவில்லை. இது அரசமைப்புச்சட்டத்தின் பிரிவு 14-ஐ மீறுவதாகும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜி.சிவபாலமுருகன் ஆஜராகி, இது தொடா்புடைய விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

மேலும், இதே போன்று, 1999-ஆம் ஆண்டைய, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து (மதிப்பீடுகள் மற்றும் வரிகள் வசூலிப்பு) விதிகள் 15(சி) விதியின்கீழ் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்ததை எதிா்த்து மேல்முறையீட்டு மனுவும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தாா்.

அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT