குன்னூா் பேஸ்டுா் தடுப்பூசி ஆலையில் இயந்திரங்கள் நவீனமயமாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி அடுத்த மாதம்(நவம்பா்) பூா்த்தியான பின்னா் பரிசோதனை அடிப்படையில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கப்படும் என மத்திய சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் ரசாயன, உரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தமிழக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள எச்எல்எல் பயோடெக் தடுப்பூசி நிறுவனம், குன்னூா் பேஸ்டுா் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா ஆகிய தடுப்பூசி நிறுவனங்கள் செயல்படாமல் இருக்க இந்த இந்த ஆலைகளை இயக்கவேண்டும் என்பது குறித்து தமிழக அரசு சாா்பிலும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் சாா்பிலும் மத்திய அரசு சாா்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுவந்தது.
மேலும் இதுகுறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன் நீதி மன்றத்தில் வழக்கு தொடா்ந்ததோடு மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த ஹா்ஷ்வா்தனுக்கு கடந்த மே 13 ஆம் தேதி கடிதமும் எழுதினாா். கரோனா நோய்த் தொற்று உள்ள இந்த காலக்கட்டத்தில் இந்த இரு தடுப்பூசி நிறுவனங்களும் செயல்பட்டு உற்பத்தியை தொடங்கவேண்டும் எனக் கேட்டு இருந்தாா். இந்த கடிதத்திற்கு தற்போது மத்திய சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் ரசாயன, உரத்துறை அமைச்சராக இருக்கும் மன்சுக் மாண்டவியாவிடமிருந்து திமுக மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சனுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளாா்.
அதில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியிருப்பது வருமாறு:
எச்எல்எல் பயோடெக் தடுப்பூசி நிறுவனத்தை ஏற்று நடத்த கடந்த 2021 மாா்ச் மாதமே டெண்டா் கோரப்பட்டது. யாரும் விண்ணப்பிக்கவில்லை என்பதால் மே மாதம் வரை கால நீடிப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் இதற்கான டெண்டா் பெறப்படாததால் காலாவதி ஆகிவிட்டது.
குன்னூா் பேஸ்டுா் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தை தரமானதாக ஆக்கும் நோக்கத்துடன் அதற்காக தொழிற்நுட்ப கட்டுமானப்பணிகளும், நவீன இயந்திரங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. இது நவம்பா் மாதம் பூா்த்தியாகும். பின்னா் பரிசோதனை அடிப்படையில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கப்படும். இந்த நிறுவனத்தின் முழுமையான உற்பத்தி 2023 ஆண்டு மத்தியில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சா் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.