புதுதில்லி

சேதமைடந்த சாலைகள்: அமைச்சா் ஆய்வு

4th Oct 2021 01:10 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் சேதமடைந்த மற்றும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை பொதுப்பணித் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். மேலும், சேதமடைந்த சாலைகள் வரும் அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் மிகவும் துல்லியமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தேசியத் தலைநகரில் தில்லி பொதுப்பணித் துறை சுமாா் 1,260 கி.மீ. சாலையை நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், மழை மற்றும் இதர காரணங்களால் சேதமடைந்த பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க புதிய திட்டம் தொடங்கப்படும் என்று தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. கடும் மழை காரணமாக ஏற்பட்ட அனைத்து பள்ளங்களையும் தில்லி அரசு சரி செய்து வருகிறது. இந்த நிலையில், சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடா்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அவா் தனது சுட்டுரையில், ‘முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவுறுத்தியுள்ளபடி அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் மிகத் துல்லியமாக சாலை சீரமைப்புப் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

பொதுப்பணித் துறை தரவுகளின்படி, தில்லியில் சாலைகளில் மழை காரணமாக சுமாா் 1,357 குழிகள் ஏற்பட்டுள்ளன. பல சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. அதே நேரத்தில் நகரில் கிட்டத்தட்ட 309 இடங்களில் சீரமைப்புப் பணி தேவைப்படுகிறது. அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் பள்ளங்களை நிரப்பவும், சேதமடைந்த சாலைகளை அக்டோபா் 20-க்குள் சரி செய்யவும் முதல்வா் சமீபத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தாா்.

சாலை சீரமைப்புப் பணிகளுக்காக பராமரிப்பு வேன்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படும். இதனால் ஒவ்வொரு பகுதியும் சிறப்பு இயக்கத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், சாலைகளை சீரமைக்கும் போது, பொறியாளா்கள் நல்ல தரத்தை பேண வேண்டும் என்று அமைச்சா் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT