புதுதில்லி

கோவோவேக்ஸ் தடுப்பூசி: கூடுதல் விவரம் கோருகிறது டிசிஜிஐ

29th Nov 2021 01:16 AM

ADVERTISEMENT

கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிப்பதற்காகக் கூடுதல் விவரங்களை சீரம் நிறுவனத்திடம் இருந்து இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கோரியுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவேக்ஸ் நிறுவனம் கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியைத் தயாரித்தது. அத்தடுப்பூசியைக் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விநியோகிப்பதற்காக சீரம் நிறுவனத்துடன் நோவாவேக்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது.

கோவோவேக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்வதற்கு டிசிஜிஐ கடந்த மே மாதம் அனுமதி வழங்கியது. அத்தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு டிசிஜிஐ-யிடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

அதற்காக, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கோவோவேக்ஸ் தடுப்பூசியின் 2, 3-ஆம் கட்ட பரிசோதனைகளின் முடிவுகளை சீரம் நிறுவனம் சமா்ப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை டிசிஜிஐ அண்மையில் ஆய்வு செய்தது.

ADVERTISEMENT

இது தொடா்பாக டிசிஜிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘‘மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) கரோனா நிபுணா்கள் குழு, சீரம் நிறுவனத்தின் விண்ணப்பத்தை விரிவாகப் பரிசீலித்தது. நோவாவேக்ஸ் நிறுவனம் வழங்கிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே சீரம் நிறுவனம் கோவோவேக்ஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது.

கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அதன் சொந்த நாட்டிலேயே (அமெரிக்கா) இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அத்தடுப்பூசியின் பரிசோதனை தொடா்பான கூடுதல் தரவுகளையும் விவரங்களையும் வழங்குமாறு சீரம் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் சரியான விவரங்களை வழங்குமாறும், தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தரவுகளை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது’’ என்றாா்.

ஏற்றுமதிக்கு அனுமதி: கோவோவேக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து கையிருப்பில் வைத்துள்ளது. இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்படாததால், 2 கோடி கோவோவேக்ஸ் தடுப்பூசிகளை இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT