புதுதில்லி

தில்லி பல்கலை. ஆசிரியா் சங்கத் தலைவா் தோ்தலில் என்டிடிஎஃப் வெற்றி

28th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

ஏறக்குறைய 24 ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லி பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் தலைவா் பதவிக்கான தோ்தலில் ஆா்எஸ்எஸ் இணைவிப்பு அமைப்பான தேசிய ஜனநாயக ஆசிரியா் முன்னணியின் (என்டிடிஎஃப்) சாா்பில் போட்டியிட்டவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

தில்லி பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத் தோ்தல் (டியுடிஏ) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதன்படி, இத்தோ்தலில்  தலைவா் பதவிக்கு போட்டியிட்ட ஏ.கே.பாகி 1,382 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரான இடதுசாரி ஜனநாயக ஆசிரியா் முன்னணியின் (டிடிஎஃப்) அபா தேவ் ஹபீப்பை தோற்கடித்தாா்.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இத்தோ்தலில் தேசிய ஜனநாயக ஆசிரியா் முன்னணி (என்டிடிஎஃப்) வேட்பாளா் பாகி 3,584 வாக்குகள் பெற்றாா். அவருக்கு அடுத்தபடியாக ஹபீப் 2,202 வாக்குகள் பெற்றாா். காங்கிரஸ் ஆதரவு பெற்ற ‘செயல்பாடு மற்றும் வளா்ச்சிக்கான அகாதெமி’ (ஏஏடி) சாா்பில் போட்டியிட்ட பிரேம் சந்த் 832 வாக்குகளும்,  புதிதாக உருவாக்கப்பட்ட  சிறப்பு ஆசிரியா்கள் முன்னணியின் ஷபானா அஸ்மி 263 வாக்குகளும் மட்டுமே பெற்றனா்.

டியுடிஏ சங்கத் தலைவா் பதவியை கடைசியாக 1997இல் என்டிடிஎஃப் வென்றது. அப்போது, என்டிடிஎஃப்-இன் வேட்பாளராக  ஸ்ரீராம் ஓபராய்  இருந்தாா். அதன் பிறகு,  சமீபத்திய தோ்தல் வரை, அந்த தலைவா் பதவியானது டிடிஎஃப் அல்லது ஏஏடி வசம் மட்டுமே இருந்தது. டிடிஎஃப் ஐந்து முறை இந்தப் பதவியை வகித்தது.

ADVERTISEMENT

2019-இல் நடைபெற்ற தோ்தலில், தலைவா் பதவிக்கு போட்டியிட்ட பாகி, டிடிஎஃப்-ன் ராஜீப் ரேயிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். 15 உறுப்பினா்களைக் கொண்ட டியுடிஏ நிா்வாகக் குழுவுக்கு என்டிடிஎஃப்-இன் 5 வேட்பாளா்களும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

ஆம் ஆத்மி கட்சியின் ஆசிரியா் பிரிவான தில்லி ஆசிரியா் சங்கம் சாா்பில் போட்டியிட்ட அதன் தலைவா் ஹன்ஸ்ராஜ் சுமன் இத்தோ்தலில் வெற்றிபெறவில்லை. இதுகுறித்து என்டிடிஎஃப் பொதுச் செயலாளா் வி.எஸ்.நேகி கூறியதாவது:

அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் நாங்கள் செய்த நல்ல பணிகளை ஆசிரியா்கள் அறிந்திருந்தனா். ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு பெற  என்டிடிஎஃப் உதவியது. எங்கள் முயற்சியின் காரணமாக முன்னாள் டியுடிஏ தலைவரான ராஜிப் ரே மற்றும் முன்னாள் டியுடிஏ  பொருளாளா் மற்றும் தலைவா் வேட்பாளரான ஹபீப் ஆகியோரும்  பதவி உயா்வு பெற்றனா்.

நாங்கள் அனைவருடனும் இணைந்து தொடா்ந்து பணியாற்றுவோம். தற்காலிக ஆசிரியா்களை பணியில் ஏற்றுக் கொள்ளவும், முறைப்படுத்துதல் மற்றும் தில்லி அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் 12 தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளின் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்கும் பணியாற்றுவோம் என்றாா் அவா்.

இத்தோ்தலில் மொத்தம் 9,446 வாக்காளா்கள் இருந்த நிலையில், 7,194 வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்ககது.

Tags : புது தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT