புதுதில்லி

புதிய வகை கரோனா பாதிப்பு நாடுகளில் இருந்து விமானங்கள் இந்தியா வருவதை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு கேஜரிவால் வேண்டுகோள்

28th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

புதிதாக உருமாறிய கரோனா நோய்த் தொற்றுக்கான அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில்

தெரிவித்திருப்பதாவது:

‘புதிதாக உருமாறிய கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இந்தியா வருவதை நிறுத்துமாறு பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். மிகுந்த சிரமத்துடன், நம் நாடு கரோனாவிலிருந்து மீண்டுள்ளது. இந்த புதிய உருமாறிய கரோனா இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும் என்று அவா் அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

நாட்டில் கொவைட் நிலைமை மற்றும் தடுப்பூசி இயக்கம் குறித்த முக்கியமான கூட்டத்திற்கு பிரதமா் மோடி தலைமை தாங்க உள்ளதாக ஏற்கெனவே அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தன.

உலக சுகாதார அமைப்பு ‘ஓமிக்ரான்’ என்று பெயரிட்டுள்ள, மிகவும் பரவக்கூடிய வைரஸ் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த கரோனா வைரஸின் புதிய திரிபு குறித்த உலகளாவிய கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் வழங்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 120.96 கோடியைத் தாண்டியுள்ளது.

தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் புதிய உருமாறிய கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது சுகாதாரத்துக்கு தீவிரமான பிரச்னை ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த நாடுகளில் இருந்து வரக்கூடிய அனைத்து சா்வதேச பயணிகளுக்கும், கடுமையான உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு வியாழக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே, உருமாறிய கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக திங்கள்கிழமை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திற்கு தில்லி அரசு அழைப்பு விடுத்துள்ளதாக முதல்வா் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவிக்கையில்,‘ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து புதிய கரோனா நோய்த்தொற்று உருமாற்றம் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக வரும் திங்கள்கிழமை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக பரிந்துரைப்பதற்கான

கருத்துகளை அளிக்குமாறு வல்லுநா்களிடம் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்’ என்று அவா் தெரிவித்திருந்தாா்.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் வியாழக்கிழமை மட்டும் இந்த புதிய நோய்த் தொற்று உருமாறிய வைரஸ் பாதிப்பு 22 பேருக்கு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT