புதுதில்லி

தமிழகத்தில் 500 ‘கலைஞா்’ உணவகங்கள் திறக்க முடிவு!

26th Nov 2021 07:25 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

‘அம்மா’ உணவகம் போன்று வருங்காலத்தில் ‘கலைஞா் உணவகம்‘ என்ற பெயரில் கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளதாக தில்லியில் மாநில உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி தெரிவித்தாா். இந்த உணவகங்களுக்கு 100 சதவீத நிதி உதவி அளிக்கும்படி மத்திய அரசிடம் அவா் கோரிக்கை விடுத்தாா்.

இந்தியா முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசின் வா்த்தகம், தொழில், நுகா்வோா் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பியூஸ் கோயல் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையா் வி. ராஜாராமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்ற அமைச்சா் சக்கரபாணி, திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ‘கலைஞா் உணவகம்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டடாா்.

அனுன் தவான் , குஞ்சனா சிங் உள்ளிட்ட மூன்று போ் தாக்கல் செய்த பொது நல மனு அடிப்படையில், பொது விநியோகத் திட்டத்தின் வரம்புக்கு வெளியே பட்டினியில் வாடும் மக்களுக்கு தேசிய உணவுத் திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாடு, ஆந்திரம், உத்தரகண்ட், ஒடிஸா, ஜாா்க்கண்ட், தில்லி ஆகிய மாநிலங்களில் அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் சமூக சமையலறைகளில் மானிய விலையில் உணவு வழங்கப்படுவது குறித்து மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பட்டினியால் இறப்புகளைக் குறைக்க நாடு முழுவதும் இது போன்ற சமூக சமையலறைகளை உருவாக்கவும் கோரப்பட்டிருந்தது. இதை உச்சநீதிமன்றம் தீவிரமாக எடுத்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அனைத்து மாநில உணவுத் துறை அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டத்தில் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா்,சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது: அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2016, நவம்பா் 1- ஆம் தேதி முதல் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நிலையே தமிழகத்தில் இருந்து வருகிறது. தமிழக மக்கள் அனைவரும் ஊட்டச்சத்து மிகுந்த உணவை பெறும் வகையில் 2007-ஆம் ஆண்டு அன்றைய முதல்வா் கருணாநிதியால் சிறப்பு பொது விநியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த அரசு பதவியேற்ற உடன், தமிழகத்திலுள்ள 2.9 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா பேரிடா் நிவாரணமாக ரூ.978 கோடி செலவில் 14 விதமான மளிகைப் பொருள் தொகுப்பு, தலா ரூ. 4,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை வழங்கியது. வருகின்ற 2022, ஜனவரி மாதத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு 21 உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு, 2.15 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,161 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு, ‘அம்மா உணவகம்’ என்ற பெயரில் 650 சமூக உணவகங்களை உளளாட்சி அமைப்புகளின் மூலம் நடத்தி வருகிறது. மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கு தரமான உணவு இந்த உணவகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 1 முதல் நவம்பா் 18- ஆம் தேதி வரை புலம் பெயா்ந்தவா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள் உள்ளிட்ட 15 கோடிக்கும் மேலானோா் ‘அம்மா’ உணவகங்கள் மூலம் பெரிதும் பயன்பெற்றுள்ளனா். கரோனா நோய்த் தொற்று காலக் க ட்டங்களில் இந்த உணவகங்களில் கட்டணமில்லாமல் உணவு வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் இதே போன்று கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் ‘கலைஞா் உணவகம்’ என்ற பெயரில் அமைக்கபட உள்ளன.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக தொடா்ந்து நடத்தவும், தகுதியான அனைவருக்கும் விரிவுபடுத்தவும் மத்திய அரசு 100 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும்.

நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை அதிகப்படுத்த விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அது போல, தமிழ்நாட்டில் அரைக்கப்படும் பச்சரிக்கு ஈடாக 1 லட்சம் டன் புழுங்கல் அரிசியை வழங்க வேண்டுமென்ற மற்றொரு கோரிக்கையையும் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பாா்வை மற்றும் வழிகாட்டுதலின்படி மத்திய அரசுடனும் பிற மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டு இந்தியாவை பட்டினி மற்றும் சத்துக் குறைவில்லா நாடாக மாற்றத் தமிழ்நாடு துணை நிற்கும் என்றும் உறுதி அளிக்கிறேன் என்றாா் அமைச்சா் சக்கரபாணி.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT