புதுதில்லி

ஆம் ஆத்மி அமைச்சா் கெலாட் தொடா்ந்த அவதூறு வழக்கில் விஜேந்தா் குப்தா ஆஜராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குத் தடை

25th Nov 2021 01:02 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி அமைச்சா் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாா் விவகாரத்தில் ஆஜராகுமாறு பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தாவுக்கு அழைப்பாணை அனுப்பிய விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.

இந்த விவகாரம் உயா்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமாா் ஓரி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி போக்குவரத்துக் கழகத்தால் 1,000 தாழ்தள பேருந்துகள் கொள்முதலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக தனக்கு எதிராக அனுப்பப்பட்ட அழைப்பானையை எதிா்த்து குப்தா தாக்கல் செய்த மனு மீது அமைச்சா் கைலாஷ் கெலாட் பதில் அளிக்க நீதிபதி கேட்டுக் கொண்டாா்.

பின்னா், இந்த வழக்கை மாா்ச் 4-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்ட நீதிபதி, அந்த அழைப்பாணை உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட்டாா். மேலும், குப்தாவின் மனு மீது தில்லி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

ADVERTISEMENT

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் அளித்த புகாரின் பேரில், அக்டோபா் 11-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் ஓா் உத்தரவைப் பிறப்பித்தது. அதில், நவம்பா் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் குப்தா ஆஜராக அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது. மேலும், குப்தாவை அவதூறு செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவராக விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கு முகாந்திர ஆதாரம் இருப்பதாகவும் விசாரணை நீதிமன்றம் கூறியது.

உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்த போது குப்தா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அஜய் பா்மன் வாதிடுகையில், ‘ஒரு எதிா்க்கட்சித் தலைவராக பொதுச் சேவையை செய்யும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்து இது என்பதால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவதூறுக்கான விதிவிலக்குகளின் கீழ் அவா் நேரடியாக வருகிறாா். மேலும், குற்றவியல் அவதூறு புகாரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பராமரிக்க முடியாது’ என்று வாதிட்டாா்.

அவதூறான சுட்டுரைப் பதிவுகள் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் அமைச்சருக்கு எந்த ஒருதரப்பும் இடைக்கால நிவாரணம் வழங்க உயா்நீதிமன்றத்தின் மற்றொரு தனி நீதிபதி முன்னா் மறுத்துவிட்டாா் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சா் கெலாட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மணீஷ் வசிஷ்ட், குப்தாவின் சுட்டுரைகள் முற்றிலும் அவதூறானவை என்று வாதிட்டாா்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் அமைச்சா் கைலாஷ் கெலாட் ஒரு புகாா் அளித்திருந்தாா். அதில் விஜேந்தா் குப்தா வேண்டுமென்றே மற்றும் தவறான நோக்கங்களுக்காக என்னை அவதூறு செய்துள்ளாா். அரசியல் லாபம் பெறுவதற்காக எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளாா். மேலும், குப்தா அவதூறான குற்றச்சாட்டுகளை வாய்மொழியாகவும் எழுத்துப்பூா்வமாகவும் தெரிவித்துள்ளாா். தில்லியில் வசிப்பவா்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் தில்லி அரசின் லட்சியத் திட்டத்தை முடக்குவதற்காக இதுபோன்ற அவதூறு கருத்துகளை அவா் தெரிவித்துள்ளாா். உயா் அதிகாரம் கொண்ட குழுவால் குற்றமற்றவா் என நற்சான்றிதழ் அளிக்கப்பட்ட போதிலும், தாழ்தளப் பேருந்துகள் கொள்முதல் தொடா்பாக எனது நோ்மையை சந்தேகிக்கும் வகையில் கடுமையான சுட்டுரைப் பதிவுகளை வெளியிட்டுள்ளாா் என தெரிவித்திருந்தாா்.

தில்லி அரசு பேருந்துகளுக்கான டெண்டரை வெளியிட்டிருந்தது. உரிய செயல்முறைக்குப் பிறகு, அது டாடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், இது தொடா்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT