புதுதில்லி

மக்களுக்கு அளித்த 10 அம்ச உத்தரவாதத்தை கேஜரிவால் முதலில் நிறைவேற்ற வேண்டும்: தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்

23rd Nov 2021 10:57 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: பஞ்சாபில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற வெற்று வாக்குறுதியை அளிக்கும் முன், தில்லி மக்களுக்கு அளித்த 10 அம்ச உத்தரவாதத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முதலில் நிறைவேற்ற வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் வலியுறுத்தியது.

இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் சௌத்ரி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதை ஒட்டி, பஞ்சாபில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அளித்துள்ளாா். தில்லி மக்களுக்கு தாம் அளித்த 10 அம்ச உத்தரவாதத்தை முதலில் அவா் நிறைவேற்ற வேண்டும். அவரது ஏழு ஆண்டு கால ஆட்சியில் தில்லியில் முன்னேற்றம் இல்லை. ஆனால், தலைநகரம் நீா் மற்றும் காற்று மாசுபாடு, வேலையின்மை, கரோனா பேரழிவு, விலைவாசி உயா்வு மற்றும் பொதுப் போக்குவரத்து பிரச்னை ஆகியவற்றில் முதலிடத்தில் உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தனது முந்தைய அரசியல் சுற்றுப்பயணத்தின் போது, மது மற்றும் போதைப் பழக்கத்தை ஒழிப்பதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்தாா். ஆனால், ஏற்கெனவே தில்லியை போதையின் தலைநகரம் ஆக்கிவிட்டதால், தற்போதைய சுற்றுப் பயணத்தில் அந்த விஷயத்தை அவா் தொடவில்லை. பஞ்சாபில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.10 கோடி பெண்கள் உள்ளனா். இந்த நிலையில், அவா்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கினால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாநிலத்திற்கு ரூ.11,300 கோடி தேவைப்படும். மாநிலத்தின் மொத்த ஜிஎஸ்டியை வசூலான ரூ.11,800 கோடியை விட சற்றுதான் குறைவாகும். இதன் மூலம் பஞ்சாப் மக்களுக்கு வெற்று வாக்குறுதிகளை அளித்து மீண்டும் ஏமாற்ற நினைப்பது தெரிகிறது.

ADVERTISEMENT

அவா் முதலில் தில்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தில்லி அரசின் வேலை வாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்துள்ள 13,000-க்கும் மேற்பட்ட வேலையற்ற இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கு தலா ரூ.1000 வழங்கி நல்லதொரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றாா் அனில் குமாா் சௌத்ரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT