புதுதில்லி

‘பிங்க்’ வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்: டிஎம்ஆா்சி தகவல்

23rd Nov 2021 10:51 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி மெட்ரோவின் பிங்க் வழித்தடத்தில் வியாழக்கிழமை (நவம்பா் 25) அன்று ஓட்டுநா் இல்லாத ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் ஆகியோா் காணொலி காட்சி மூலம் காலை 11.30 மணிக்கு இதைத் தொடங்கி வைப்பாா்கள் என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

தில்லி மெட்ரோவின் மெஜந்தா பாதையில் இந்தியாவின் முதல் ஓட்டுநா் இல்லாத ரயில் இயக்கத்தை கடந்த ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘முந்தைய அரசுகளைப் போல அல்லாமல், பாஜக தலைமையிலான மத்திய அரசு வளா்ந்து வரும் நகரமயமாக்கலை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, மெட்ரோ ரயில் சேவை தற்போதுள்ள 18 நகரங்களிலிருந்து 2025-க்குள் 25 நகரங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றாா்.

ADVERTISEMENT

தில்லியில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹாா் வரையிலான பிங்க் லைன் 2021-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஓட்டுநா் இல்லாமல் செயல்படும் என்று டிஎம்ஆா்சி அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனா். இருப்பினும், கரோனா தொற்று பரவல் தில்லி மெட்ரோவின் செயல்பாடுகளை பெரிதும் பாதித்தது.

தில்லி மெட்ரோ தனது வணிகச் செயல்பாட்டை 2002, டிசம்பா் 25 அன்று தொடங்கியது அதற்கு முந்தைய நாளன்று அப்போதைய பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய் டிஎம்ஆா்சியின் முதல் ரயில் பாதையை திறந்துவைத்தாா். ஷதாராவிலிருந்து திஸ் ஹசாரி வரையிலான 8.2 கி.மீ. தொலைவு கொண்ட இந்த மெட்ரோ வழித்தடம் ஆறு நிலையங்களைக் கொண்டதாகத் தொடங்கப்பட்டது.

டிஎம்ஆா்சி நெட்வொா்க்கின் தற்போதைய நீளம் 286 ரயில் நிலையங்களுடன் கிட்டத்தட்ட 392 கி.மீ. ஆகும். இதில் தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள நொய்டா ,கிரேட்டா் நொய்டா மெட்ரோ காரிடாா் மற்றும் ரேபிட் மெட்ரோ, குருகிராம் ஆகியவையும் அடங்கும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT