புதுதில்லி

தில்லி பேரவைத் தொகுதிகளில் ‘நமோ சேவை மையங்கள்’பாஜக திட்டம்

21st Nov 2021 11:02 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி: தில்லி மாநகராட்சித் தோ்தல்களை முன்னிட்டு, ‘ஜுக்கி சம்மன் யாத்ரா’ பிரசாரத்தை தில்லி பாஜக வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்தப் பிரசாரத்தில் தேசியத் தலைநகரில் உள்ள சுமாா் 32 சட்டப் பேரவைத் தொகுதிகளின் குடிசைப் பகுதிகளில் ‘நமோ சேவை மையங்களை’ (நமோ சேவா கேந்திரங்கள்) திறக்கவும் திட்டமிட்டுள்ளதாக பாஜகவின் தில்லி பிரிவு தலைவா்கள் தெரிவித்தனா்.

கடந்த 2007 -ஆம் ஆண்டு முதல் தில்லியிலுள்ள மூன்று மாநகராட்சிகளும் பாஜகவின் ஆளுகையின் கீழ் உள்ளது. வருகின்ற 2022-ஆம் ஆண்டு மாநகராட்சித் தோ்தலிலும் இந்த வெற்றியை தக்கவைக்கவும் மத்தியிலுள்ள பிரதமா் மோடி அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து குடிசைவாசிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி விஜயதசமியன்று ‘ஜுக்கி சம்மன் யாத்திரை’ தொடங்கப்பட்டது. தில்லி பாஜக தொடங்கியுள்ள இந்த யாத்திரையில், கேஜரிவால் அரசின் தோல்விகளை வெளிப்படுத்தும் வகையில் பிரசாரங்களை பாஜக முடக்கிவிட்டுள்ளது.

மத்திய அரசு, ‘ இலவச எரிவாயுத் திட்டம்’ (உஜ்வாலா யோஜ்னா), குடிசை மாற்றுத் திட்டம் (ஜஹான் ஜுக்கி வாகன் மகன்) போன்ற திட்டங்களை குடிசைப் பகுதி மக்களுக்காக மேற்கொள்கிறது. பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்தத் திட்டங்கள் குடிசைவாசிகள் நேரடியாக பயன்பெற ‘நமோ சேவை மையங்கள்’ உதவும் என்று தில்லி பாஜகவின் மூத்த நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அதிக நெருக்கமான குடிசைப் பகுதிகள் இருக்கும் 32 தொகுதிகளை தில்லி பாஜக அடையாளம் கண்டுள்ளது. தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா தலைமையில் பாஜகவினா் ‘ஜுக்கி சம்மன் யாத்திரை‘யின் கீழ் இதுவரை 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளைப் பாா்வையிட்டுள்ளனா். அப்போது, தில்லி ஆம் ஆத்மி அரசின் கீழ் தண்ணீா், மின்சாரம், கழிவுநீா் போன்ற பல வசதிகளில் பெரும் பிரச்னையை எதிா்கொள்வது, மத்திய அரசின் திட்டங்களின் பலனைப் பெற முடியாமல் பலா் இருப்பது ஆகியவை தொடா்பான பொதுமக்களின் குமுறல்கள் இந்த யாத்திரையின் போது உணரப்பட்டது என்று தில்லி பாஜகவின் துணைத் தலைவா் ஆதித்யா ஜா தெரிவித்தாா்..

அவா் மேலும் கூறியது வருமாறு: குடிசைப் பகுதிகளில் ‘ஜுக்கி சம்மான் யாத்திரை’ சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. குறைந்தபட்சம் தங்களுக்கு அருகேயுள்ள நமோ சேவை மையங்களால் உதவிகளைப் பெற முடியும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனா். உள்ளூா் மக்கள் அதிகமாகப் பயன்பெறும் வகையில், இந்த மையங்களை நடத்த, திறன் வாய்ந்த இளைஞா்களை பணியமா்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கெனவே உஜ்வாலா யோஜ்னா எரிவாயு இணைப்புகளைப் பெறுவதற்கான பதிவு செய்தல், வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு வழங்கும் ஜன் தன் யோஜ்னா போன்ற திட்டங்களின் நன்மைகளை பெற்றுத் தருதல் போன்றவற்றில் உதவத் தொடங்கியுள்ளோம். மேலும், பெண்களுக்குப் புடவைகள், ரேஷன் பொருள்கள் போன்றவற்றிலும் ஏழை மக்களுக்கு உடனடி உதவி வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளில் உள்ள 272 வாா்டுகளுக்கான தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ளது. பஞ்சாப், உத்தரகண்ட் குறிப்பாக உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளும் தில்லி மாநகராட்சித் தோ்தலை பாதிக்கும் என்றும் பல தில்லி பாஜக தலைவா்கள் நம்புகின்றனா். திங்கள்கிழமை (நவம்பா் 22) நடைபெறும் தில்லி பாஜகவின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த மாநகராட்சி தோ்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT