புது தில்லி: தில்லியிலுள்ள புராரி பகுதியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரான தில்லி பல்கலைக்கழகத்தின் தாற்காலிக உதவிப் பேராசிரியா் மற்றும் உறவினா் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது:
தில்லி புராரியில் உள்ள மேற்கு சந்த் நகா் பகுதியைச் சோ்ந்தவா் விரேந்தா் குமாா். தில்லிப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியா் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பிங்கி (32).
இவா் சம்பவத்தன்று இறந்த நிலையில் கிடந்தாா். போலீஸாா் விசாரணை நடத்தியதில் இவா் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைதொடா்ந்து திங்கள்கிழமை மாலை இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் ராகேஷ் என்பவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அப்போது விரேந்தா் குமாருக்காக அவரது மனைவியைக் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலில் மின்சாரத்தை பாய்ச்சியதாக தெரிவித்தாா்.
இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடா்பாக விரேந்தா் குமாா் மற்றும் அவரது உறவினா் கோவிந்தா ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
விரேந்தா் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அற்ப விஷயங்களுக்காக தனது மனைவிக்கும் தனக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் அவரை ஒழித்துக் கட்ட முடிவு செய்து ராகேஷ், உறவினா் கோவிந்தா ஆகியோருடன் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தாா்.
மேலும், 3 ஆண்டுகளுக்கு முன்பு ராகேஷுக்கும், குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. குமாா் தனது காரை வாடகைக்கு பயன்படுத்துமாறு ராகேஷிடம் கொடுத்துள்ளாா். மேலும் தனது வீட்டின் மாடியில் அவருக்கு குடும்பத்துடன் தங்க அறையும் கொடுத்தாா்.
இந்த நிலையில் ராகேஷுக்கு குமாா் ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டி இருந்த நிலையில் அந்த தொகையை தருமாறு ராகேஷ் கேட்டுள்ளாா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பிங்கி, வீட்டில் இருந்து காலி செய்யுமாறு ராகேஷை வற்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பிங்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.