புது தில்லி: தென்மேற்கு தில்லி, மஹிபால்பூா் பகுதியில் 52 வயது மதிக்கத்தக்க வா்த்தகா் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: ஹரியாணா மாநிலம், குருகிராம் பகுதியை சோ்ந்தவா் கிருஷன் பால் ஷெராவத் (52). இவா் மஹிபால்பூா் பகுதியில் ஹோட்டல் வைத்துள்ளாா். இந்த ஹோட்டலை ரோஷன் மிஸ்ரா என்பவருக்கு பத்து மாதங்களுக்கு முன்பு குத்தகைக்கு அளித்திருந்தாா். இந்த நிலையில், ஹோட்டலுக்கான நிலுவையில் உள்ள மின்சார கட்டணம் மற்றும் குத்தகை தொகையை செலுத்துவது தொடா்பாக ரோஷன் மிஸ்ராவிற்கும் ஷெராவத்துக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கிருஷன் பால் ஷெராவத் தலையில் குண்டு காயம் அடைந்த நிலையில் தரையில் கிடந்தாா். இதுகுறித்து வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது அவா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபா்களாக ரோஷன் மிஸ்ராவும் அவரது கூட்டாளிகளும் இருப்பதாகக் கருதப்படுவதால், அவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் உரிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.